IT raid

சென்னை ஜாஸ் சினிமாஸ், மிடாஸ், சுரானா குழுமம் உள்ளிட்ட 10 நிறுவனங்களைக் குறிவைத்து இந்தியா முழுவதும் 4 பெருநகரங்களில் 187 இடங்களில், வருமான வரித்துறையைச் சேர்ந்த 1800 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சசிகலாவின் அண்ணன் மகனான விவேக் ஜெயராமனுக்குச் சொந்தமான, சென்னை, கிண்டியில் உள்ள ஜாஸ் சினிமாஸ், சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மிடாஸ் மது ஆலைகள், ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் பத்திரிகை என பல்வேறு இடங்களில் ஐடி ரெய்டு இன்று காலை முதல் நடத்தப்பட்டு வருகிறது. 

டிடிவி தினகரன், திவாகரன், விவேக், நடராஜன், மகாதேவன், விவேக்-ன் சகோதரி கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சிவக்குமார், டாக்டர் வெங்கடேஷ், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் செந்தில், விவேக்கின் மாமனார், மணல் ஒப்பந்தக்காரர் ஆறுமுக சாமி, மேலும், காற்றாலை நிறுவனங்கள், சுரானா குழுமம், புதுச்சேரியில் லட்சுமி குரூப் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை துவங்கிய சோதனை 11 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது.

வேளச்சேரியில் உள்ள ஜாஸ் திரையரங்கம், கிண்டியில் உள்ள அலுவலகம் என அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சினிமா பார்ப்பதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு, பணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் ஜாஸ் திரையரங்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சசிகலாவினி சகோதரர் திவாகரன் வீட்டில் சுமார் 4 மணி நேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டனர். இதன் பின்னர் திவாகரனிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

ஜெயா டிவியில் நடத்தப்பட்ட சோதனை குறித்து ஒளிபரப்ப தொலைகாட்சி நிர்வாகம் ஒளிபரப்ப முயன்றது. அதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


சசிகலாவுக்கு சொந்தமான 190 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சசிகலாவின் உறவினர்கள் அனைவரது வீடுகளும் சோதனைக்கு ஆளாகியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள டிடிவி பண்ணை வீடு, சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக் ஜெயராமன் வீடு, தி.நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீடு, தாம்பரத்தில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை, தஞ்சாவூர் நடராஜன் வீடு, மன்னார்குடியில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு, நீடாமங்கலம் அருகே உள்ள திவாகரன் பண்ணை வீடு, செங்கமலத்தாயார் கல்லூரி ஊழியர் அன்பு ஜானகிராமன் வீடு, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி, ஜாஸ் சினிமா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சசிகலா உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தும் முடிவு செப்டம்பரிலேயே எடுக்கப்பட்டது என தெரிகிறது.

தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் 1800 பேர், 187 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், 190 இடங்களைத் தவிர மேலும் பல இடத்தில சோதனை நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் போதிய அதிகாரிகளை திரட்ட இயலாததால் பல இடங்களில் சோதனை நடத்தவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சசிகலா உறவினர் வீடுகள், அலுவலங்களில் ரெய்டை தொடர்ந்து வங்கிக்கணக்குகளை நாளை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. வருமான வரிச் சோதனையில் நூற்றுக்கணக்கான வங்கிக்கணக்கு விவரங்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இவ்வளவு எண்ணிக்கையிலானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இதற்கு முன்பாக இவ்வளவு பெரிய சோதனை நடைபெற்றது இல்லை என்று கூறப்படுகிறது. வருமான வரித்துறையின் இந்த சோதனை, தமிழக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.