தமிழக அரசின் இட ஒதுக்கீடு சட்டப்படி தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் 4050 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :- மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டு உச்சநீதிமன்றத்தை அணுகின, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்தில் 1994 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு 30  சதவிகிதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகிதமும் அளிக்க வேண்டும் என்பதே தமிழக கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது. மத்திய கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் சேர்க்கை சட்டத்தின்படி, வெளிமாநிலங்களில் உள்ள மருத்துவ, பல் மருத்துவ படிப்புகளுக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 

 

அதேசமயம் அந்த அந்த மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், மாநில இட ஒதுக்கீடு அடிப்படையில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாணவர் சேர்க்கை  நடக்க வேண்டும் என்பது முக்கிய சாராம்சமாகும். தற்போது மருத்துவ இளங்கலை இடங்கள் 15 சதவிகிதமும், மருத்துவ முதுகலை இடங்கள் 50 சதவீதமும், அகில இந்திய ஒதுக்கீட்டில் மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. நீட் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்காததால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். கடந்த 2013 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் 8121 மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழ்நாடு சமர்ப்பித்துள்ளது. தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு சட்டப்படி தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 4 ஆயிரத்து 50 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள்  குரல் எழுப்பியும் மத்திய பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை.  

இதன் மூலம் மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர பின் தங்கிய வகுப்பினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு இழைக்கப்படும் அநீதியைக் கலைவதற்காகவே அனைத்து கட்சிகளும் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இந்நிலையில் மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கான 50 சதவிகித ஒதுக்கீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசின் வழக்குரைஞர், உச்சநீதிமன்றத்தில் சலோனி குமாரி வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கை விசாரிக்க கூடாது என்று வாதிட்டார். சலோனி குமாரி வழக்குக்கும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடுத்திருக்கும் வழக்குக்கும் எந்த தொடர்புமில்லை. இந்தக் கருத்து உச்சநீதிமன்றத்தில் தெளிவுபடுத்த பட்ட பின்னர் தற்போது, 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில் விசாரித்து நீதி பெறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பல ஆண்டுகளாக போராடி பெற்ற சமூகநீதியை நீதிமன்றம் நிலைநாட்டும் என்ற நம்பிக்கையுடன் அனைத்து கட்சிகளும் காத்திருக்கின்றன. என அதில் கூறப்பட்டுள்ளது.