அதிமுகவை கை விட்ட தமாகா... பாஜக கூட்டணியில் இணைய முடிவு.? எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த ஜி.கே.வாசன்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி கட்சிக்கு அதிர்ச்சி கொடுக்கும் நிகழ்வுகள் பல்வேறு இடத்தில் நடைபெறுகிறது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக கூட்டணியில் இணைய இரு்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூடு பிடிக்கும் அரசியல் களம்
நாடாளுமன்ற தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடத்தி மே மாதத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இதனால் பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஆளும்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சியுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது.அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்கவுள்ளது. ஆனால் அதிமுக மற்றும் பாஜக தங்களது கூட்டணி தொடர்பாக இன்னும் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
அதிமுக- பாஜக கூட்டணியில் இழுபறி
கடந்த 5 வருடமாக பாஜக கூட்டணியில் தொடர்ந்த அதிமுக தற்போது விலகிய நிலையில், இந்த இரண்டு கட்சிகளும் புதிய கூட்டணியை உருவாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பாமக மற்றும் தேமுதிகவிற்கு இரண்டு கட்சியும் வலை விரித்துள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையை பயன்படுத்தி கூடுதல் இடங்கள் மற்றும் மாநிலங்களவை எம்பி பதவி வழங்கும் கட்சியோடு தான் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் உள்ளது. ஆனால் இதற்கு இரண்டு கட்சிகளும் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் கூட்டணியில் முடிவு ஏற்படாமல் இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பாஜக கூட்டணிக்கு செல்வது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணிக்கு ஓகே சொன்ன ஜி.கே.வாசன்
அதிமுக மற்றும் பாஜகவை ஒன்றிணைக்கும் பணியை ஜி.கே.வாசன் மேற்கொண்டார். ஆனால் அதிமுக தரப்பு பாஜகவுடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் உறுதியாக இருந்துவிட்டது. இதனையடுத்து தமாகா செயற்குழு கூட்டத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவில் பாஜக கூட்டணியில் இணையலாம் என முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஜிகே வாசன் சந்தித்து பேசியுள்ளார். அப்போது தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே இன்றோ அல்லது நாளையோ தமாகா தங்களது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளது.
இதையும் படியுங்கள்