அறவழிப்போராட்டத்தில் இது போன்ற செயல்கள் வரவேற்புடையதல்ல. ஆளுநரின் பாதுகாப்புக்கு சென்றவர்கள் மீது கட்சிக் கொடிகளை வீசி நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது.

ஆளுநரின் கார் மீது கறுப்புக் கொடி வீசியது ஏற்புடைய செயல் அல்ல என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

ஆளுநர் கார் மீது தாக்குதல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்று ஞானரத யாத்திரை புறப்பட்டார். இந்த நிகழ்வை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைப்பதற்காக மயிலாடுதுறைக்கு சென்றார். ஆளுநர் ஆர்.என் ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். ஆளுநர் வந்தபோது அவருடைய வாகனம் மீது கொடி கம்புகள் வீசப்பட்டன. ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

திருமாவளவன் கண்டனம்

ஆளுநர் வானகத்தின் மீது கொடி கம்பு வீசி நடந்த இந்தப் போராட்டத்துக்கு அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆளுநர் வாகனம் மீது நடந்த தாக்குதலுக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அரியலூரில் தொல். திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த திருமாவளவன், “ஆளுநரின் கார் மீது கறுப்புக் கொடி வீசியது ஏற்புடைய செயல் அல்ல. 

முதல்வரை பதவி விலக சொல்வதா?

அறவழிப்போராட்டத்தில் இது போன்ற செயல்கள் வரவேற்புடையதல்ல. ஆளுநரின் பாதுகாப்புக்கு சென்றவர்கள் மீது கட்சிக் கொடிகளை வீசி நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது. ஆனால், இதற்காக முதல்வர் பதவிவிலக வேண்டிய நேரம் வந்துவிட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கோரிக்கை” என்று திருமாவளவன் தெரிவித்தார்.