தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சிக்கு மட்டுமே விஸ்வாசமாக இருக்க வேண்டும். எனக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் என நான் எண்ணியதே இல்லை என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற பேச்சு எழுந்த நிலையில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக தேனியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்நிலையில் தேனி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்றது. பின்னர், நிர்வாகிகளிடம் பேசிய ஓபிஎஸ்;- கட்சிக்கு மட்டுமே தொண்டர்கள், நிர்வாகிகள் விசுவாசமாக இருக்க வேண்டும். எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நான் எண்ணியதில்லை. கட்சிக்கு விசுவாசம் உள்ளவர்களை மட்டுமே பொறுப்பாளராக போட வேண்டும். பல நூறு ஆண்டுகள் அதிமுக தொடர்ந்து இருக்கும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக அமையட்டும். 

எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும் எடுத்துவைக்க அடியும் தூய்மையாக இருக்க வேண்டும். நமது அடுத்த இலக்கு 2021ல் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதையே ஒரே இலக்காகக் கொண்டு களப்பணி ஆற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.