‘’சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி’’ என 7 பேர் விடுதலை குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை மனு மீது ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த உடனே காலதாமதம் செய்யாமல், மறுநாளே மாண்புமிகு முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் அமைச்சரவையை கூட்டி அவர்களை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவிட்டார். ஆனால், இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. இந்நிலையில், இந்த விவகாரத்தை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

’’7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல’’ என காங்கிரஸ் க்ட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

"7 பேர் விடுதலை குறித்து பேசுவதற்கு, திமுகவிற்கும், கருணாநிதி குடும்பத்தாருக்கும் எந்தவித தார்மீக உரிமையும் தகுதியும் இல்லை" என அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டி உள்ளார். 

’’உச்சநீதிமன்றத்தின் அதிருப்தியை வாய்ப்பாகப் பயன்படுத்தி, தம்பி பேரறிவாளனை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும்’’ என  நாம் தமிழர் ஒருன்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இவ்வாறு அரசியல் காரணங்களால் 7 பேரின் விடுதலையை மறுப்பது அநீதி என இயக்குநர் பா.ரஞ்சித் குற்றம்சாட்டி உள்ளார்.