பழனி கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த திமுக அரசு அனுமதி மறுப்பது வெட்கக்கேடு... சீமான் ஆவேசம்!!

பழனி திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவின் அனைத்து நிகழ்வுகளும் அன்னைத் தமிழிலேயே நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

It is a shame that the dmk govt is denying permission to perform consecration in tamil at palani temple says seeman

பழனி திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவின் அனைத்து நிகழ்வுகளும் அன்னைத் தமிழிலேயே நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் இறையோன் பழனிமலை முருகன் திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவினை தமிழிலேயே நடத்துவது குறித்த அறிவிப்பினை வெளியிடாமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. முப்பாட்டன் முருகனுக்கு தமிழ் முன்னோர்கள் கட்டிய கோயிலில் தாய்த்தமிழில் குடமுழுக்கு நடத்தக்கூட திமுக அரசு அனுமதி மறுப்பது வெட்கக்கேடாகும். நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு, பிப்ரவரி 5 ஆம் தேதி தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நிகழ்வானது தமிழ் மொழியில் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சட்டப் போராட்டம் நடத்தி வெற்றிப் பெற்றது. நீதிமன்ற ஆணையை அரசு ஏற்று அன்றைய அதிமுக அரசு தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கினைத் தமிழ் வழியில் நடத்த ஆவனச் செய்தது.

இதையும் படிங்க: நாங்களும் ஓட்டுவோம் இல்ல.. திமுகவுக்கு போட்டியாக ஆளுநருக்கு ஆதரவாக பாஜகவினர் ஓட்டிய போஸ்டர்!

அதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் டிசம்பர் மாதம் நான்காம் தேதி, கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கு குறித்தும் முன்கூட்டியே வீரத்தமிழர் முன்னணி சார்பாக, தமிழ் வழியில் குடமுழுக்கு கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதியரசர்கள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களுக்கும் குடமுழுக்கு நடக்கும்போது உறுதியாக தமிழில் நடத்தப்பட வேண்டுமென்றும், அதை நிறைவேற்றத் தவறும் கோயில் நிர்வாகத்திற்கு ரூபாய் 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கினார்கள். ஆனால், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனிமலை முருகன் திருக்கோயிலின் குடமுழுக்கு விழா வருகின்ற 27.01.2023 அன்று நடைபெறவுள்ள நிலையில் அதனை தமிழில் நடத்துவதற்கான எவ்வித அறிவிப்பும் இதுவரை கோயில் நிர்வாகம் வெளியிடாதது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குடமுழுக்கை சமஸ்கிருதத்தில் மட்டுமே நடத்த கோயில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் திட்டமிட்டுள்ளதாகவே தெரிகிறது.

இதையும் படிங்க: ஆளுநரின் தமிழ்நாடு சர்ச்சைக்கிடையே அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்த காரியம்... வைரலாகும் புகைப்படம்!!

தமிழ்நாட்டில், தமிழர் கட்டிய கோயிலில், தமிழ் இறையோன் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்தவேண்டி, தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலையிருப்பது தமிழ்ப்பேரினத்திற்கே ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அவமானமாகும். மொழி சிதைந்தால் இனம் சிதையும், இனம் சிதைந்தால் பண்பாடு அழிந்துவிடும் என்றெல்லாம் மேடையில் பேசிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பழனி முருகன் கோயிலின் குடமுழுக்கை தமிழில் நடத்த அனுமதி மறுப்பது ஏன்? தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு என்பதெல்லாம் வெறும் மேடைப் பேச்சிற்கு மட்டும்தானா? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? என்ற கேள்வியும் எழுகிறது. ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனின் பழனி திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவின் அனைத்து நிகழ்வுகளும் அன்னைத் தமிழிலேயே நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். அதுகுறித்த அறிவிப்பாணையை முன்கூட்டியே வெளியிடுமாறும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios