தமிழகத்தின் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் பொதுமக்கள் இரவு நேரங்களில் மாநகர போக்குவரத்து செயல்படாத காரணத்தினால் இரவு முழுவதும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் பொதுப் போக்குவரத்து சேவையானது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நோய்த் தொற்று கட்டுக்குள் இல்லை என்றாலும்கூட, பொருளாதர காரணங்களுக்காக ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 7ஆம் தேதி முதல் தமிழக அரசு உத்தரவின் பேரில்  மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து சேவை செயல்படத் தொடங்கியது. 

முன்னதாக ஊரடங்கு அறிவித்த போது தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், தற்போது  கொஞ்சகொஞ்சமாக தங்களது சொந்த மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் பேருந்து மூலம் பொதுமக்கள் இரவு 10 மணிக்கு மேல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வரும் நிலை உள்ளது. அதேநேரத்தில்  இன்னும்கூட சென்னையில் மாநகர போக்குவரத்து சேவை இயங்காத காரணத்தினால்,  இரவு முழுவதும் கைகுழந்தை முதல் பெரியவர் வரை என அனைவரும் பல மணி நேரமாக  பேருந்து நிலைய வளாகத்திலேயே  காத்திருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

கொரோனா ஊரடங்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சூழலில் வாடகை கால் டாக்ஸி, ஆட்டோ ரிக்ஷாக்கள் மூலம் செல்ல இயலாத காரணத்தினால், அவர்கள் மாநகர பேருந்துக்காக காத்திருக்க வேண்டியுள்ளது, அதேநேரத்தில் அவர்கள் பேருந்து நிலையத்தினுள் காத்திருக்க காவல்துறையினர் அனுமதி அளிக்காததால், சாலையோரங்களில் கொசு கடியிலும் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.