அதிமுகவுடன் கூட்டணி பேச்சை திடீரென நிறுத்திய பிரேமலதா.. யூடர்ன் அடித்து பாஜகவிற்கு வண்டியை விட்ட தேமுதிக
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், திடீரென தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீவிரமடையும் தொகுதி பங்கீடு
நாடாளுமன்ற தேர்தல் தேதி எப்போது வெண்டும் என்றாலும் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முடித்து விட்டு அடுத்த கட்டமாக தொகுதிகளின் எண்ணிக்கையும் அறிவித்து விட்டது.
விரைவில் எந்த எந்த தொகுதியில் எந்த எந்த கட்சி போட்டி என்ற அறிவிப்பையும் வெளியிடவுள்ளது. ஆனால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது.
அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த தேமுதிக
இதனை தொடர்ந்து இரண்டு கட்சிகளும் புதிதாக தனித்தனியாக கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அதிமுக தலைவர்கள் தேமுதிகவிடம் ரகசிய பேச்சு நடத்திய நிலையில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இரு தரப்பு தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக முதல் கட்ட ஆலோசனை நடத்தியது. இந்த சூழ்நிலையில் தேமுதிக தரப்பு அதிமுகவுடன் நடத்தி வந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திடீரென நிறுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பாஜக தரப்பில் மீண்டும் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையை தேமுதிக தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிமுக தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாஜகவுடன் கை கோர்க்கும் தேமுதிக
இதே போல பாமகவும் அதிமுகவுடன் ஆரம்பத்தில் தொகுதி பங்கீடு மற்றும் ராஜ்யசபா சீட் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். ஆனால் தங்களால் ராஜ்யசபா வழங்கமுடியாது என அதிமுக தரப்பு தெரிவித்து விட்டதால் பாமகவும் பாஜக கூட்டணியில் இணைய இருப்பதாக கூறப்பட்டது. இதே போல தேமுதிக தலைவர் பிரேமலதா தங்கள் கட்சிக்கும் ராஜ்யசபா சீட் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தொடராமல் பாஜக தரப்பிற்கு தேமுதிக சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்
அதிமுகவிற்கு டாடா காட்டும் அன்புமணி..!! நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கை கோர்க்கும் பாமக