ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஒன்றினைந்து கையெழுத்திட்டால் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையில் இரண்டு தரப்புக்கும் இடையே ஒற்றுமை ஏற்படவில்லையென்றால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. 

அதிமுக அதிகார மோதல்

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் அதிமுக தோல்வியை தழுவியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது சசிகலா மற்றும் தினகரனை விலக்கி வைத்தது தான் என்று கூறப்பட்டது. இந்தநிலையில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தை இழந்த அதிமுக, ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தையும் அதிமுகவில் இருந்து நீக்கியது இதன் காரணமாக அதிமுகவானது 4 பிரிவாக செயல்பட்டு வருகிறது. தற்போது நான் தான் அதிமுகவின் பொதுசெயலாளர் என எடப்பாடி பழனிச்சாமியும், நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என ஓ பன்னீர்செல்வமும் போட்டி போட்டு வருகின்றனர். இதன் காரணமாக நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு சென்ற நிலையில் நீதிமன்றத்தில் மாறி மாறி தீர்ப்பு வந்தது. இதனையடுத்து நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் அதிமுகவின் வழக்கானது தீர்ப்புக்காக காத்துள்ளது.

இடைதேர்தல் தேதி அறிவிப்பு

இந்த நிலையில் அதிமுகவின் தலைமையான எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி அடையும் வகையில் அறிவிப்பு நேற்று வெளியானது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த மாதம் உயிரிழந்தார். அவர் இறந்து ஆறு மாத காலத்திற்குள் அந்த தொகுதியில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதியாகும். ஆனால் தற்போது 14 நாட்களுக்குள் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் இபிஎஸ் தரப்பு உள்ளது.இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டுமென்றால் இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு பி ஃபார்மில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் கையொப்பம் விட வேண்டும் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஓபிஎஸ் தரப்பை நாட வேண்டிய நிலையில் உள்ளது.

இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா.?

எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஓபிஎஸ் அணியை நாடவில்லை என்றால் ஓபிஎஸ் தரப்பும் தனி வேட்பாளரை களத்தில் இறக்கும். இதன் காரணமாக இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காமல் முடக்கப்படும் சூழ்நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் ஓ.பன்னீர் செல்வத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்றது போல் தற்போது தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே இரட்டை இலை சின்னம் பெரும்பாலும் முடக்கப்டவே வாய்ப்பு உள்ள சூழ்நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பு என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டி? முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை