சந்திரயான் -2 விண்கலத்தின் ஒரு பகுதியான லேண்டர் விக்ரமை கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் மெதுவாக நிலவில் தரையிறக்கும் பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். 

இந்த வரலாற்றுச் சிறப்பு தருணத்துக்கான ஒட்டுமொத்த உலகமும் கண் விழித்துக் காத்துக்கொண்டிருந்தது. ஆனால், நிலவின் தரைப்பகுதியில் இருந்து வெறும் 2.1 கிலோ மீட்டர் தூரம் வரை திட்டமிட்டபடி தரையிறங்கி வந்த லேண்டர் விக்ரம், அதன்பிறகு திசை மாறியது. இதனால், லேண்டர் விக்ரம் மற்றும் தரைக் கட்டுப்பாட்டு மையம் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

லேண்டர் விக்ரம் நிலவில் எதிர்பார்த்தபடி தரையிறங்காதது இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமில்லாது நாட்டு மக்கள் அனைவரையும் கண் கலங்க வைத்தது. இது சந்திரயான் -2 திட்டத்தின் முழுமையான தோல்வியாக இல்லாதபோதிலும் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது. 

ஆனால் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகள் உட்பட இத்திட்டத்திற்காக பங்களித்த அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் நேர்மறையாகப் பேசினார். 

லேண்டர் விக்ரமுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு, "தைரியமாக முன்நோக்கிச் செல்லுங்கள், உங்களுடன் நான் இருக்கிறேன்" என்று விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். 

இதனால் மத்திய அரசும் செயல்பாட்டு அளவில் இஸ்ரோ விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருடைய மத்திய அரசோ  இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் ஊதிய உயர்வை ரத்து செய்துள்ளது. 

இதுதொடர்பாக ஜூன் 12-ஆம் தேதி விண்வெளித் துறை துணைச் செயலாளர் ராமதாஸ் கையெழுத்திட்டு வெளியான துறை ரீதியான அறிவிப்பில், காரணமாக எஸ்டி முதல் எஸ்ஜி கிரேட் வரையிலான அதிகாரிகளுக்கு (விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் உட்பட) 2 கூடுதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் நடைமுறையை நிறுத்திக்கொள்ளுமாறு நிதித் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

எனவே, நிதித் துறை அமைச்சகத்தின் அறிவுரையின் பேரில் கூடுதல் ஊதிய உயர்வு நடைமுறை ஜூலை 1, 2019 முதல் நிறுத்தப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.