எடப்பாடி பழனிசாமியை யார் வேண்டுமானாலும் அணுகலாம். ஸ்டாலினை அப்படி அணுக முடியுமா? உங்கள் ஓட்டு மன்னாராட்சிக்கா அல்லது மக்களாட்சிக்கா என நீங்களே முடிவு செய்யுங்கள் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பாமக வேட்பாளர் கசாலியை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “நம்முடைய அணி மக்களாட்சி அணி. திமுக அணி மன்னராட்சி அணி. இந்த அணியில் ஒரு விவசாயி முதல்வராக வரலாம். இன்னொரு விவசாயி துணை முதல்வராக வரலாம். இது மக்களாட்சி. அங்கு மன்னராட்சி. அப்பா, மகன், அவருடைய மகன்தான் வர முடியும். இதுதான் மன்னராட்சி.
திமுக தலைமையில் மன்னராட்சி என்றால் மாவட்டத்தில் குறுநில மன்னர்கள். முன்னாள் அமைச்சர்களும் அவர்களுடைய பிள்ளைகளும்தான் பதவிக்கு வரமுடியும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை நம்பவில்லை. யாரையும் நம்பவில்லை. அவர் நம்புவதெல்லாம் பீகாரிலிருந்து வந்த பிரசாந்த் கிஷோர் என்ற நபரைத்தான். பீகாரிலிருந்து அவரை அழைத்துவந்து அவரிடம் 200 கோடி ரூபாயைக் கொடுத்து என்னை எப்படியும் முதல்வராக்குங்கள் என்று கூறியுள்ளார்.
நாங்கள் எல்லோரும் உழைக்கிற பாட்டாளி, தொழிலாளர்களாகிய உங்களைத்தான் நம்புகிறோம். பிரசாந்த் கிஷோர் என்ற நபர்தான் திமுகவில் எல்லா பதவிகளையும் பொறுப்புகளையும் நியமிக்கிறார். பிரசாந்த் கிஷோர் கை காட்டுபவர்தான் திமுகவில் வட்டம், பகுதி, மாவட்ட செயலாளர்களாக வர முடியும். அவர் சொல்பவர்தான் இப்போது வேட்பாளராகியிருக்கிறார்கள். திமுகவில் எல்லோரும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலினுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை.
தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயி ஒருவர் முதல்வராகியுள்ளார். நாம் எல்லாம் விவசாயி குடும்பத்தினர்தான். நம்மில் ஒருவர், விவசாயி குடும்பத்தில் இருந்து ஒருவர் தமிழகத்தின் முதல்வராக வருவது நமக்கெல்லாம் பெருமை இல்லையா? அது தொடரவேண்டும். எடப்பாடி பழனிசாமியை யார் வேண்டுமானாலும் அணுகலாம். ஸ்டாலினை அப்படி அணுக முடியுமா? நீங்களே சிந்தித்துப்பாருங்கள். உங்கள் ஓட்டு மன்னாராட்சிக்கா அல்லது மக்களாட்சிக்கா என நீங்களே முடிவு செய்யுங்கள்” என்று அன்புமணி பேசினார்.
