விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் புதியதாக செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் உருவாகியுள்ளது. இந்த மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை நியமித்துள்ளார் விஜய்.
 
இந்த நிர்வாகிகளுடன் நேற்று மாலை ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது. விஜய் ரசிகர்கள் புகைப்படங்களை வேகமாக பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக கொரொனா காலகட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்பு எதுவும் இல்லாத காரணத்தால் தற்போது நடிகர் விஜய் வீட்டிலேயே இருந்து ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் அவருடைய மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

குறிப்பாக இந்த ஆலோசனையில் புதிய மாவட்டத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர்களை தவிர்த்து வேறு சில மாவட்டங்களை சார்ந்த நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் அவர் சார்பில் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை ரசிகர்கள் அவரிடம் முன் வைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் அடுத்த கட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் குறிப்பாக மக்கள் மன்றம் சார்பில் கொரொனா காலத்தில் எம்மாதிரியான மக்கள் பணி ஆற்றினீர்கள் என்பதெல்லாம் குறித்து விஜய் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.