தமிழக அரசியலில் தங்கத் தமிழ்செல்வனுக்கென்று தனி இடம் உண்டு. அதுவும் தடாலடி இடம். ஜெயலலிதா இருக்கும் போதே அ.தி.மு.க.வில் அதிரடி சரவெடியாய் அரசியல் செய்த மனிதர். ஜெ., மரணத்துக்குப் பின் சசிகலாவின் தலைமையை ஏற்று தினகரனோடு இருந்தவர், எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலையே படாமல் ச்சும்மா போட்டுப் பொளப்பார். அரசியல் கமெண்டுகளை.

அ.ம.மு.க.வில் இருந்து கொண்டு இவர் பண்ணிய அதிரிபுதிரிகளால் நொந்து நூடுல்ஸானார் தினகரன். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அ.ம.மு.க.வை விட்டு விலகி, தி.மு.க.வில் இணைந்தார். வெளியே வரும்போதும் தினகரனை வெச்சு செஞ்சுட்டுதான் வந்தார். 
இந்த நிலையில், தி.மு.க.வுக்கு வந்து சில மாதங்களாகியும் இன்னும் என்னடா தங்க தமிழ் செல்வன் வெடி வாயை திறக்கவில்லை? என்று எல்லோரும் ஏங்கிக் கிடக்க, இதோ ஆரம்பித்துவிட்டார் அமர்க்களத்தை. முதல் டார்கெட்டாக, தி.மு.க. இளைஞரணியின் மாநில செயலாளரும், தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதியையே அவர்  அடிச்சு தூக்கியிருப்பதுதான் ஹிட்டு. 

அதாவது இரு தொகுதி இடைத்தேர்தலுக்கு உதயநிதியின் பேச்சும், செயல்பாடுகளும்தான் காரணம் என்று சிலர் கொளுத்திப் போட, அதற்கு பதில் சொல்லியிருக்கும் தங்கத்தமிழ்செல்வன் “நாடாளுமன்ற தேர்தலில் உதயநிதி தீவிர பிரச்சாரம் செய்கிறார், ஜெயிக்கிறோம். அதில் எந்த பிரச்னையும் வரவில்லை. ஆனால் அடுத்த மூன்று, நான்கு மாதத்தில் இந்த இடைத்தேர்தல் வருகிறது. அதற்குள் உதயநிதி முதலமைச்சாராகிவிட்டாரா என்ன? 

அவர் பாட்டுக்கு தன் வேலையை செய்கிறார். அவசியப்படும்போதெல்லாம் கட்சிக்கு பிரசாரம் செய்வது, கூட்டம் நடத்துவது, ஆலோசனை செய்வது என்றிருக்கிறார். அதன் பின் தனது நடிப்புத் தொழிலையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரைப் போய் வம்புக்கு இழுப்பது ஏன்? 
எங்கள் தலைவர் ஸ்டாலின் தான் சொல்லிவிட்டாரே தெளிவாக....’அ.தி.மு.க.வினர் பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் தான் ஜெயித்திருக்கிறார்கள்’ என்று. மக்களுக்கு உதயநிதியைப் பிடித்திருக்கிறது. அவர் செல்லும் இடங்களிலெல்லாம் கூட்டம் கூடுகிறது. எதிர்வரும் சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் அவரால் கட்சி அடையப்போகும் எழுச்சியை பொறுத்திருந்து பாருங்கள்.” என்று வெளுத்திருக்கிறார். தங்கத்தின் இந்த தடாலடி பேட்டியைப் பார்த்து ‘நம்மை விட அதிகமா உதயநிதியை உயர்த்தி வெச்சு பேசுறாரே! ஆனாலும் உதய்யை ‘முதலமைச்சரா ஆகிட்டார்’ன்னு சொல்றதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்!’ என்று ஷாக்காகி இருக்கிறார். 
இருக்காதா பின்னே!