is udhayakumar wishes dinakaran for his victory in rk nagar

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு வாழ்த்து சொன்னதாக ஒரு தகவல் பரவியது. ஒரு டிவிட்டர் பதிவில் அவர் அவ்வாறு வாழ்த்து சொன்னதாகக் கூறப்பட்டது. 

அந்த டிவிட்டர் பதிவில், ஆர்.கே.நகரில் அண்ணன் வெற்றி பெற்றது உள்ளபடியே மகிழ்ச்சி. அம்மாவின் ஆன்மா அவரோடு தான் இருக்கிறது. வாழ்த்துக்கள் சார்.

இதுதான் அந்தப் பதிவில் உள்ள வாழ்த்துச் செய்தி. ஆனால், இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் ஆர்.பி. உதயகுமார். இதை அடுத்து, போலி டிவிட்டர் கணக்கு மூலம் தன் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகார் அளித்துள்ளார்.

தன் பெயரில் போலியான கணக்கு மூலம் டிடிவி தினகரனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து, வீண் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக, இது போன்ற செயல்களை சிலர் செய்வதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். 

ஏற்கெனவே இது தொடர்பாக புகார் அளித்துள்ளதாகக் கூறும் ஆர்.பி.உதயகுமார் காவல்துறையில் இந்த டிவிட்டர் பதிவு தொடர்பாக புகார் அளித்துள்ளார். மேலும், தனது பெயரில் உள்ள அந்த டிவிட்டர் பதிவை நீக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

ஏற்கெனவே அவரது பெயரில் உள்ள டிவிட்டர் பதிவுகள் மூலம், தினகரனுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்திருந்தால், பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதனால் அவர் முன்னரே புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.