இன்று ஏற்பட்ட இந்த நிகழ்வுகளுக்கு பஞ்சாப் சன்னி அரசாங்கம் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். மத்திய அரசின் உள்துறையும் இதை முழுமையாக விசாரித்து பிரதமரின் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாரதப் பிரதமர் தன்னுடைய பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்ப டெல்லி செல்லும் நிலை ஏற்பட்டிருப்பது ஒரு ஜனநாயக நாட்டிற்கு அழகல்ல என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த மாநிலங்களுக்கு மாறி மாறி சென்று திட்டங்களை தொடங்கி வைப்பது, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது என பிரதமர் மோடி உள்ளார். இந்நிலையில் பஞ்சாப்புக்கு சாலை வழியாக சென்ற பிரதமர் மோடியின் பயணம் பொதுமக்களின் முற்றுகை போராட்டத்தால் ரத்து செய்யப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த விவகாரம் தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூரில் இன்று 42,750 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காகச் சென்ற பாரதப் பிரதமர் மோடி மோசமான வானிலை காரணமாக தன்னுடைய பயணத் திட்டத்தை ஹெலிக்காப்டரில் செல்வதற்கு பதிலாக சாலை மார்க்கமாகச் செல்ல முடிவெடுத்து இருந்ததாக தெரிகிறது. எப்பொழுதுமே முக்கியப் பிரமுகர்கள் பயண திட்டத்தில் இதுபோன்று மாற்றம் செய்யப்படுவது வழக்கம்தான். பிரதமர் பதிண்டா விமான நிலையத்திலிருந்து ஹெலிக்காப்டருக்கு பதிலாக சாலை மார்க்கமாகச் செல்ல முடிவெடுத்த உடனேயே அவர் செல்லுகின்ற பாதை முழுமைக்கும் மாநில அரசு தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்திருக்க வேண்டும்.
ஆனால் அவர் சென்றடைய வேண்டிய இடத்திற்கு முன்பாக ஹூசைனிவாலா பகுதியில் மிக முக்கியமான பாலத்தையே வழிமறித்து போராட்டம் செய்ய எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது தெரியவில்லை? போராட்டத்திற்கு முன்பே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும்கூட, பிரதமரின் பயணம் சாலை வழி என தெரிந்தவுடனையே மாநில அரசு அப்போராட்ட அனுமதியை ரத்து செய்துவிட்டு போராட்டக்காரர்களை முழுமையாக அப்புறப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், பஞ்சாப் மாநில அரசு பிரதமரின் பாதுகாப்பை ஏன் சரியாக கையாளவில்லை என தெரியவில்லை.
இதில் மாநில அரசு முழுமையாக உள்நோக்கத்தோடு செயல்பட்டதாகவே கருத முடிகிறது. அதுவும் பாரதப் பிரதமர் தன்னுடைய பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்ப டெல்லி செல்லும் நிலை ஏற்பட்டிருப்பது ஒரு ஜனநாயக நாட்டிற்கு அழகல்ல. இன்று ஏற்பட்ட இந்த நிகழ்வுகளுக்கு பஞ்சாப் சன்னி அரசாங்கம் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். மத்திய அரசின் உள்துறையும் இதை முழுமையாக விசாரித்து பிரதமரின் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
