நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் பரம்பரை பரம்பரையாக கொண்டாடப்படும் பொங்கல் விழாவில் பங்கேற்க தேசிய கட்சி தலைவர்கள் முன்பு வரவில்லை. தற்போது பாஜக தலைவர் ஜேபி நட்டா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வருவது தேர்தலுக்காக மட்டுமே. பிற நாடுகளில் எல்லாம் அந்த நாட்டின் பிரதமர்கள் முதலில் கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அது போல இந்தியாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு அந்த தடுப்பூசியை கொண்டு வர வேண்டும்.


படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு என்றால் மோடி,அமித்ஷா அரசியலில் போட்டியிடும் அரசியல்வாதிகள் அமைச்சரவையில் நிர்வாகியாக வேண்டும் என்று நினைப்போருக்கு அரசியல், சமூகம், பொருளாதாரம், புவியியல் உள்ளிட்டவற்றில் தேர்வு வைக்க வேண்டும். தேர்வு எழுதி வெற்றி பெற்றால் நிர்வகிக்கட்டும். வேண்டும் என்றால் நானும் எழுதுகிறேன். பிரதமர்கள், அமைச்சர்கள், முதல்வர் பதவியில் அமர்வதற்கு முன்னர் அவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும். தமிழக எல்லையில் தமிழ்ப் பெயர் பலகை மீது கன்னடம் எழுதுவது தொடர்ந்தால், தமிழகத்தில் ஒரு கன்னட நிறுவனமும், கன்னட மொழி பதாகைகளும் இருக்காது.
ரஜினி ரசிகர்கள் உண்மையிலேயே அவரை நேசித்தால், நிம்மதியாக அவரை ஒய்வெடுக்க விட வேண்டும். இரண்டு திராவிட கட்சிகளும் சம அளவு எதிரிகளாகும். அதேபோல பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கொள்கை வித்தியாசம் இல்லை. தமிழ் தேசியத்திற்கு எதிரானதும் திராவிட கட்சியின் மூலமான திமுகவைதான் எதிர்க்கிறேன். அதற்காகவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து நான் போட்டியிட உள்ளேன். அவர் தன்னை எதிர்த்து கூட்டணி பலம் இல்லாமல் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் போட்டியிட தயாரா?” என சீமான் தெரிவித்தார்.