இதுகுறித்து அவர், ‘’ஒரே நாட்டில் பிறந்து, ஒரே கலாச்சாரத்தில் வளர்‌ந்து ஒரே வரலாறு கொண்டவர்களாய் வாழும், ஒரு மக்கள் கூட்டத்தினரை பார்த்து ஆரியன் என்று வெறுப்பதும் இன்னொறு கூட்டத்தை பார்த்து வடநாட்டான் என்று ஒதுக்குவதும் மற்றொரு கூட்டத்தை பார்த்து வந்தேறிகள் என்று விஷம் கக்குவதும்! வசவு மொழிகள் பேசுவதுமாக நேற்றுவரை இருந்தவர்கள் இன்று நமது நாட்டில் பிறக்காத, நமக்கு உறவோ, தொடர்போ இல்லாத, சொல்லப்போனால் நம்மை எதிரிகளாய் பார்க்கும் நாடுகளிலிருந்து வரும் சட்டவிரோத குடியேறிகள் மீது அன்பு காட்டுவதும், அவர்களை இங்கே அனுமதிக்க வேண்டும் என்று கூறுவதும் எதற்காக? ஏன் இந்த நாடகம்? ஏன் இந்த நடிப்பு?

நாம் இரு சக்கர வாகனத்திலோ, நான்கு சக்கர வாகனத்திலோ தனியாக பயணம் செல்லும்போது நமக்கு அறிமுகம் இல்லாத நபர்களை பார்ப்பதற்கே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய சந்தேகத்திற்குரியவர்களாக எண்ணத் தோன்றும் வகையில் இருப்பவர்களை வாகனத்தில் ஏற்றிக்கொள்ள விரும்புவது இல்லை, அதற்குக் காரணம் நமது வசதி குறையும் என்கிற எண்ணமல்ல, தேவையில்லாமல் ஆபத்தை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என்கின்ற முன் எச்சரிக்கை எண்ணம். சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்ளவேண்டாம் என்கின்ற விழிப்புணர்வு.

சொந்த நாட்டு மக்களிடம் இல்லாத நம்பிக்கை நமக்கு சம்பந்தமே இல்லாத அந்நிய நாட்டு மக்கள் மீது நமக்கு வருவது ஏன்? நாம் ஏன் இப்படி ஆகிவிட்டோம். ஏன் இந்த சிந்தனை வறட்சி எங்கிருந்து வருகின்றது? ஏன் இந்த ஏமாளித்தனம்? யாரால் வருகின்றது இந்த அறியாமைத்தனம்?

இந்தியாவை நேசித்து வாழ்பவர்களோடு, மனிதனை மனிதனாக மதித்து வாழ்பவர்களோடு, நமது வரலாற்றை நமது கலாச்சாரத்தை நமது வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டு நம்மோடு சகோதர உணர்வுடன் வாழ்பவர்களோடு நாம் நட்பு பாராட்டவேண்டும். அவர்கள் எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களாக, இருந்தாலும் அவர்களோடு நாம் சேர்ந்து வாழவேண்டும்.

என்னை விட, என் தனி மனித சுய அபிலாஷைகளை விட நாடு முக்கியம், நாட்டின் வளர்ச்சியும், அமைதியும், இறையாண்மையும் முக்கியம் என்பவர்களே தேசபக்தி கொண்டவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவர். இதற்கு மாறாக, நாட்டைவிட என் மொழி முக்கியம், நாட்டைவிட என் மதம் முக்கியம், என்று சொல்கின்றவர்கள் ஆபத்தானவர்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சமயம் பார்த்து அவர்கள் நாட்டை ஆபத்தில் சிக்க வைத்து விடுவார்கள்.

இந்த நேரத்தில் இன்றைய தமிழக அமைச்சர் ஒருவர் சொன்ன கருத்து சத்தியமானது. இந்தியாவில் வாழ்பவர்கள் எல்லாம் இந்தியர்கள் அல்ல, யாருடைய இதயத்தில் இந்தியா வாழ்கின்றதோ அவர்களே உண்மையான இந்தியர். அனைவருக்கும் குடியுரிமை வேண்டும் என்று போராடுகின்ற எதிர்கட்சிகளின் கோரிக்கை அதிர்ச்சியளிக்கின்றது என்றால், குடியுரிமை கேட்டு போராடும், சில அமைப்புகளின் செயலும், சட்டவிரோத குடியேறிகள் நடத்தும் வன்முறை வெறியாட்டமும் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

'எங்கள் கோரிக்கையை பரிசீலியுங்கள்’என்று கருணை மனு போடவேண்டிய அவர்கள், பொதுமக்களின் அன்றாட பணிகள் தடைபடுமாறு சாலைகளை மறிப்பதும், அரசை மிரட்டுகின்ற வகையில் வன்முறையில் ஈடுபடுவதும், ரயில்களுக்கு தீ வைத்து கொளுத்துவதும், பேருந்துகள் மீது தாக்குதல் நடத்துவதும், பொது சொத்துக்களை தீக்கிரையாக்குவதும், நமது நாட்டிற்கு எதிராக கோஷமிடுவதும், ராணுவத்திற்கு எதிராக பேசுவதும், பாதுகாப்பு படையினர் மீது கல்வீசி தாக்குவதும் ஏற்புடையதா? அப்பப்பா பாரத நாட்டில் சிறுபான்மையினருக்கு என்ன உரிமை இங்கு தரப்படவில்லை?’’என அவர் தெரிவித்துள்ளார்.