கோஷ்டி பிரச்னையைத் தீர்க்க டெல்லி பயணம் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நாட்டின் பிரதமர் கூட்டணி தலைவரா? இல்லை அதிமுக தலைவரா என்றே தெரியவில்லை என்று தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைச் சந்தித்து பேசினார்கள். இந்தச் சந்திப்பு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் சென்னையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றன. அந்தக் கூட்டத்தில் தமிழக அரசியல் சூழல், பொதுமக்களின் வாழ்வாதார பிரச்னைகள், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைள் பற்றியெல்லாம் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக மிக மோசமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஒரு நாள்கூட பாக்கி இல்லாமல் தினந்தோறும் மக்கள் விரோத நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டு வருகிறது. ஒளிப்பதிவு திருத்தச் சட்டம், கடல் ஒழுங்காற்று சட்டம், பொது சொத்தை தாரைவார்ப்பது போன்ற மோசமான நடவடிக்கைகளில் பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நாட்டு மக்கள் மீது பாஜக தாக்குதல் நடத்துகிறது. இதை எதிர்த்து, தமிழ்நாட்டில் விரிவான பாஜக எதிர்ப்பு மக்கள் அணியை உருவக்க பங்காற்றுவோம்.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நல்ல பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இனியும் பல நல்ல நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்க இருப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். மக்கள் ஆதரவு பெரும் வகையில் திமுகவின் நடவடிக்கைகள் தொடர வேண்டும். வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். அதிமுகவில் ஏகப்பட்ட கோஷ்டி ஏற்பட்டுவிட்டது. தற்போது கோஷ்டி பிரச்னையைத் தீர்க்க டெல்லி பயணம் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நாட்டின் பிரதமர் கூட்டணி தலைவரா? இல்லை அதிமுக தலைவரா என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு அதிமுக பலவீனமாக இருப்பதற்கு கோஷ்டி பிரச்னை குறித்து பிரதமரிடம் முறையிட சென்றுள்ளாதே சாட்சியாகும்.
மக்கள் பிரச்னைகள் குறித்து அதிமுக தற்போது அறிக்கை விடுகிறது. ஆனால், இந்த கோரிக்கைகளை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக நிறைவேற்றி இருக்கலாம். அப்போதெல்லாம் கையாளாகாத அரசாக இருந்துவிட்டு, தற்போது மக்கள் பிரச்னைக்காக போராடுகிறோம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். அதிமுக ஆட்சி மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுள் உள்ளன. ஊழல் செய்தவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
