கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது. அதன்பிறகு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால், காவிரி மேலாண்மை வாரியத்தை இன்னும் இரண்டு தினங்களுக்குள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம் நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது. மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை தீர்ப்பில் குறிப்பிடப்படாததால், அதை சுட்டிக்காட்டி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குகிறது என தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேநேரத்தில், எந்தவித அதிகாரமுமில்லாத மேற்பார்வை ஆணையத்தை அமைக்காமல், அதிகாரமிக்க மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் மத்திய அரசை அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் வலியுறுத்துகின்றன. 

ஏற்கனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு அலட்சியம் காட்டிவந்த நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். அதனால், காவிரி மேலாண்மை வாரியமோ அல்லது மேற்பார்வை ஆணையமோ அமைக்கப்படுவதில் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி மத்திய அரசு, மேலும் காலம் தாழ்த்தலாம் என்ற ஐயப்பாடு தமிழக அரசியல் கட்சிகளிடையேயும் விவசாயிகளிடையேயும் நிலவுகிறது.