ஷர்மிளாவுக்கு கார்: கோவையில் கமல் அரசியல் கணக்கு - பின்னணி என்ன?
கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கார் பரிசளித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது
கோவை சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா கடந்த இரண்டு நாட்களாக பேசு பொருளாகியுள்ளார். திமுக எம்.பி., அவரது பேருந்தில் பயணம் செய்த அடுத்த சில மணி நேரங்களில் அவரது பணி பறிக்கப்பட்டது. விளம்பரத்துக்காக அவர் பேருந்தில் பிரபலங்களை ஏற்றுவதால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவம் தொடர்பாக, பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா, நடத்துனரான மற்றொரு பெண் அன்னத்தாய், தனியார் பேருந்து நிர்வாகம் ஆகியோர் தரப்பில் தனித்தனியாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கார் பரிசளித்துள்ளார். “ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை. ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆளவருகையில், ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், கோவையை நோக்கி கமல்ஹாசன் மீண்டும் தனது பார்வையை திருப்பியுள்ளதாக கூறுகிறார்கள். இதுகுறித்து விசாரிக்கையில் பல்வேறு தகவல்கள் தெரியவருகிறது. மக்கள் நீதி மய்யம் என்ற தனிக்கட்சியை ஆரம்பித்து, ரஜினி போல் அல்லாமல் கட்சி ஆரம்பித்த கையோடு, அவரது கட்சியை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வைத்தார் கமல்ஹாசன். அந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 3.77 சதவீத வாக்குகளையும் பெற்றது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி களமிறங்கியது. ஆனால், தோல்வியை தழுவியது. கோவையில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார். கமலின் தோல்வி அக்கட்சியினரை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. இதையடுத்து, கட்சியில் இருந்து மூத்த நிர்வாகிகள் பலர் வெளியேறினாலும், கட்சி பணிகளில் கமல்ஹாசன் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டி வரும் கமல்ஹாசன், அண்மையில் கர்நாடக மாநிலத் தேர்தலில் ராகுல காந்தியின் அழைப்பையேற்று அக்கட்சிக்கு ஆதரவளித்தார். முன்னதாக, ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து, திமுக கூட்டணியில் சேர இன்னும் ஒரு படி நெருங்கி வந்துள்ளார்.
எதிர்வரவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு கண்டிப்பாக அங்கீகாரம் பெற்று விட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், தனித்து நின்றால் சாதிக்கும் வாய்ப்பு குறைவு என்பதால், திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அந்தவகையில், திமுக தரப்பில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு மக்களவை தொகுதி கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும், மற்றவற்றை தேர்தல் நேரத்தில் பேசிக் கொள்ளலாம் என தெரிவித்து விட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு விரைவில் புதிய தலைவர்? ரேஸில் யார்?
இதனால், உற்சாகமடைந்துள்ள கமல்ஹாசன், கோவை பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளதாக கூறுகிறார்கள். ஒரு தொகுதியென்றாலும் கொங்கு மண்டலத்தில் குறிப்பாக, கோவையை கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் கமல் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே கோவை தொகுதியில் கமலுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட நெருங்கி வந்தது. எனவே, இந்த முறை திமுக கூட்டணியும் அமைந்தால் எம்.பி.யாகி விடலாம் என்பது கமலின் கனவாக இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
திமுகவை பொறுத்தவரை ஏகத்துக்கும் கூட்டணி கட்சிகள் இருந்தாலும், கமல்ஹாசனையும் அரவணைத்துக் கொள்ளவே விரும்புவதாக தெரிகிறது. முதல்தலைமுறை வாக்காளர்கள் குறிப்பாக, நகர்ப்புற வாக்காளர்களின் வாக்குகளை ஈர்க்க கமல்ஹாசன் அவசியம் என்பதால், அவரை திமுக உபயோகப்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். மேலும், கமலுக்கு ஆதரவாக ராகுல் காந்தி பேசவும் வாய்ப்புள்ளதாகவும், ஒருவேளை திமுக கூட்டணியில் இணையவில்லை என்றால், காங்கிரஸ் மூலம் கோவை தொகுதியை கமல் குறி வைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
இந்த பின்னணியில், கோவையில் அவர் அதிகம் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்ததில் அரசியல் உள்நோக்கம் இல்லையென்றாலும், அரசியல் கணக்குகள் கண்டிப்பாக இருக்கும் என விவரம் அறிந்தவர்கள் அடித்துச் சொல்கிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் கோவையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட கமல்ஹாசன், வாய்ப்பு அமைந்தால் கோவையில் போட்டியிடுவது நல்ல யோசனையாக இருக்கும் என வெளிப்படையாகவே தெரிவித்தார்.
இருப்பினும், கூட்டணி விவகாரத்தில் கமல்ஹாசன் எந்த கருத்தையும் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஈரோடு இடைத்தேர்தலின்போது, தற்போதைய சூழ்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது, ஓராண்டுக்குப் பிறகு எங்களின் நிலைப்பாடு என்ன என்பதை இப்போதே நாங்கள் கூறுவோம் என்று எதிர்பார்க்க முடியாது என அவருக்கே உரிய பாணியில் தெரிவித்து விட்டு சென்றார் என்பது குறிப்பிட்டத்தக்கது.