தூத்துக்குடியில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜகவை பொறுத்தவரை புதுச்சேரியில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது. முன்னர் கிரண்பேடி மூலம் இந்த முயற்சிகள் நடைபெற்றன. இப்போது தமிழிசை மூலம் முயற்சிக்கிறார்கள். இதுபோன்ற விவகாரங்களில் பாஜகவும் காங்கிரஸும் வேறுவேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். இரண்டு கட்சிகளின் கொள்கைகளும் ஒன்றுதான். இந்த இரு கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.


பாஜக இந்தியாவையே ஆளுகிற கட்சி. அந்தக் கட்சிக்கு தைரியம் இருந்தால் நாம் தமிழர் கட்சியைப் போல கூட்டணியே இல்லாமல் தமிழகத்தில் தனித்து போட்டியிட முடியுமா? ஜல்லிக்கட்டு வழக்கு, சிஏஏ போராட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நாம் தமிழர் கட்சியினர் மீதுதான் அதிக வழக்குகள் பதியப்பட்டன. அந்தச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.” என்று சீமான் தெரிவித்தார்.