தமிழக அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக  மாறியிருக்கிறது இந்த கேபிள் டி.வி. விவகாரம். தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அதிரடியாக மாத வாடகையை குறைத்த பிறகும் கூட மக்களிடம் மிகப்பெரிய மாற்றம் ஏதுமில்லை. தனியாரை நம்பித்தான் அவர்களின் பின்னால் போய்க் கொண்டிருக்கிறார்கள். 

இந்த நிலையில் கேபிள் சேர்மன் பதவியில் மீண்டும் அமர்த்தப்பட்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை வெளிப்படையாகவே சாடினார் அமைச்சராக இருந்த மணிகண்டன். ராதாகிருஷ்ணன் தனியாக கேபிள் டி.வி. நிறுவனம் நடத்துவதாகவும், அவரிடம் இருக்கு பல ஆயிரக்கணக்கான இணைப்புகளை அரசிடம் தரவேண்டும்! என்றெல்லாம் போட்டு விளாசினார். இதைத்தொடர்ந்து மணிகண்டனின் பதவி பறிக்கப்பட்டது. 

இந்த நிலையில் கேபிள் டி.வி. துறையில் தடாலடியாக சில மாற்றங்களை உருவாக்கிடும் பணியிலிருக்கிறார் அமைச்சர் ராதாகிருஷ்ணன். அவரிடம் “இலவச ஆடு மாடு திட்டம் போல, இலவச கேபிள் கனெக்‌ஷன் கொடுக்கும் திட்டம் ஏதாவது எதிர்வரும் சட்டசபை தேர்தலின் போது அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதா?’ என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு விரிவாக பதிலளித்திருக்கும் உடுமலையார் “ம்ஹூம்! இப்படி செய்ய துளியும் வாய்ப்பில்லை. ஏனென்றால் ட்ராய் விதிமுறைப்படி குறைந்தபட்ச தொகை வசூலிக்கப்பட வேண்டியது கட்டாயம். மேலும் இலவசமாக கொடுத்தால் கேபிள் தொழிலை அரசு நடத்துவதும் சிரமம் ஆகிவிடும்.


 
இலவச ஆடு மாடு திட்டமெல்லாம் வருடத்துக்கு ஒரு முறை கொடுக்கப்படுவது என்பதால் பிரச்னையில்லை. ஆனால் கேபிள் டி.வி. என்பது மாதந்தோறும் பணம் வசூலிக்கும் தொழில். இதனை அரசு இலவசமாக கொடுத்தால், இந்த தொழிலை நம்பி இருக்கும் பல ஆயிரம் தனியார் நபர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று சிலர் வழக்கு போடுவார்கள். இதனால் இலவச கேபிள் கனெக்‌ஷனுக்கு வாய்ப்பே இல்லை.” என்றிருக்கிறார் ஒரே அடியாய். 

கருணாநிதி டி.வி. கொடுத்தாரு இலவசமா! நீங்க ஒரு கேபிள் கனெக்‌ஷன் கூட கொடுக்க மாட்டீங்களா டியர் எடப்பாடியார் சார்!