தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து பத்திரிக்கைகளில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் பத்திரிக்கைகளில் கொடுக்கப்பட்ட விளம்பரங்களுக்கு செலவு செய்யப்பட்ட தொகை வெறும் 58 கோடி ரூபாய் மட்டுமே. பத்திரிக்கைகளில் கொடுக்கப்பட்ட விளம்பரங்களுக்கு செலவு செய்யப்பட்ட தொகை குறித்து சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழக அரசே ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து 64.72 கோடி ரூபாய் என்று தகவல் தெரிவித்துள்ளது. உண்மை நிலை இப்படி இருக்க,  தி.மு.க வேண்டும் என்றே திட்டமிட்டு பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘’தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் துரைமுருகன் வேண்டும் என்றே பொய் பேசி வருகிறார். தி.மு.க ஆட்சியின் போது பத்திரிக்கை விளம்பரங்களுக்கு செலவு செய்யப்பட்ட தொகை சுமார் 100 கோடி ரூபாயாகும். தி.மு.க ஆட்சியில் ஏ. ஆர். ரஹுமான் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்களை வைத்து செம்மொழி மாநாட்டுக்காக மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் விளம்பரங்களுக்காக செலவு செய்தது’’ என ஆதங்கப்படுகிறார்.