கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு இணையாக பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘’நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் வீரியம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், தமிழகத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதும், எந்தவித அறிகுறியும் இல்லாமல் திடீரென கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவில் இருப்பதும் மிகுந்த கவலை அளிக்கிறது.

நோய்ப் பரவலைத் தடுக்க ஊரடங்கிற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறமோ அதற்கு இணையாக, பரிசோதனைகளின் அளவை அதிகப்படுத்துவதும் அவசியமாகிறது. எனவே, தமிழகத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்’’ என வலியுறுத்தி இருக்கிறார்.