"பிரதமர் மோடி ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றுக்கூட நிறைவேற்றப்படவில்லை. இப்படி பல கோளாறுகளை வைத்துள்ள பாஜக தமிழகத்தில் எப்படி வளரும்?”
பாஜக வளரும் என்று கூறுவது எல்லாமே பகல் கனவுதான் என தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.
சேலத்தில் கே.வி. தங்கபாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு தேர்தல் நடைமுறைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தேர்தலுக்காக எல்லா மாவட்டங்களிலும் வாக்குச்சாவடி குழுக்கள், மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக ஒன்றிய அளவில் தேர்தல் நடைமுறைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் அமைப்பு தேர்தலில் பங்கேற்க விரும்புபவர்கள் வேட்பு மனுக்களை பெற்று, அதைப் பூர்த்தி செய்து தேர்தல் அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்.

பின்னர் மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். பிறகு ஜனநாயக முறைப்படி தேர்தல் சுதந்திரமாக அனைவரும் பங்கேற்கும் வகையில் நடைபெறும். இந்தத் தேர்தல் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு நடைபெறும். தமிழகத்தில் பாஜக பெரிய கட்சியாக வளர வாய்ப்பே கிடையாது. தேசிய கட்சியான காங்கிரஸ் தற்போது திமுக கூட்டணியில் உள்ளது. இந்த கூட்டணிதான் மகத்தான கூட்டணி ஆகும். மக்கள் ஏற்றுக் கொண்டுள்ள கூட்டணியும் இதுதான். பாஜக வளரும் என்று கூறுவது எல்லாமே பகல் கனவுதான். அது ஒரு போதும் தமிழகத்தில் நடக்காது. நாட்டில் ஏழை வர்க்கம் மிகப்பெரிய கொடுமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. கடந்த எட்டு ஆண்டுகளில் பிரதமர் மோடி ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றுக்கூட நிறைவேற்றப்படவில்லை. இப்படி பல கோளாறுகளை வைத்துள்ள பாஜக தமிழகத்தில் எப்படி வளரும்?” என்று கே.வி. தங்கபாலு தெரிவித்தார்.
