பரப்பன அக்ரஹாரா சிறை விவகாரம் தொடர்பாக தனக்கு நேரடியாக எந்த மிரட்டலும் இல்லை என்று கர்நாடக மாநில ஊர்க்காவல்படை ஐஜி ரூபா தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கர்நாடக சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு வசதிகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. 

இந்த புகாரை அப்போதைய சிறைத்துறை அதிகாரியாக இருந்த டிஐஜி ரூபா கூறியிருந்தார்.பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விரும்பியே அங்கு ஆதாரங்ளை திரட்டியதாக கூறினார்.

சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணா மீதும் குற்றம் சாட்டியிருந்தார். இதனை அடுத்து, ரூபா பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு இயக்க நிகழ்ச்சியில் ஐபிஎஸ் ரூபா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்ததார்.

அப்போது பேசிய அவர், பரப்பன அக்ரஹாரா சிறை விவகாரம் தொடர்பாக தனக்கு நேரடியாக எந்த மிரட்டலும் இல்லை என்றார். ஆபத்து என பலர் எச்சரித்தும் அதைப்பற்றி கவலைப்படாமல் பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்ததை வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பாக விண்ணப்பம் கொடுத்தால் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுவதாகவும் பதில் சொல்வதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் ஐபிஎஸ் ரூபா குற்றம் சாட்டினார்