சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் நடத்திய எழுச்சிமகு போராட்டத்தில் சென்னை அண்ணா சாலையே ஸ்தம்பித்தது. இந்நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக  பாரதிராஜா, வைரமுத்து, சீமான், வெற்றிமாறன் உள்ளிட்ட 500 பேர் மீது அண்ணாசாலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நேற்று மாலை இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர் மற்றும் கவியரசு வைரமுத்து ஆகியோர் சென்னை அண்ணாசாலையில் ஐபிஎல் போட்டிக்கு தங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டம் ஐபிஎல் போராட்டத்திற்கு எதிரானது அல்ல என்றும், காவிரிக்கு ஆதரவான போராட்டம் என்றும் இது அமைதியான அறவழி போராட்டம் என்றும் வைரமுத்து  தெரிவித்திருந்தார்.

இதையடுத்து  போராட்டம் திடீரென தடியடி காரணமாக போர்க்களமாக மாறியது. இந்த தடியடியில் இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட ஒருசிலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் தடியடி சம்பவத்திற்கு நீதிகேட்டு தர்ணா போராட்டம் நடத்திய பாரதிராஜா, சீமான், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இரவு விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா, வெற்றிமாறன், சீமான், அமீர் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட 500 பேர் மீது, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அண்ணாசாலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்