invite azhagiri to lead dmk poster
தலைமை ஏற்று திமுகவை காப்பாற்று என மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுத்து நெல்லை அருகே ஒட்டப்பட்ட போஸ்டரால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வு காரணமாக அரசியலிலிருந்து ஒதுங்கி ஓய்வெடுத்து வருகிறார். அதனால், திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

திமுகவை வழிநடத்தும் ஸ்டாலினின் தலைமைப் பண்பு தொடர்பாக அரசியல் நோக்கர்கள் நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் கடுமையான குழப்பங்களும் அணி தாவல்களும் நடந்தன. இன்னும் அதிமுகவில் குழப்பமான சூழலே நீடிக்கிறது.
கருணாநிதி மட்டும் தீவிர அரசியலில் இருந்திருந்தால், அதிமுகவின் குழப்பங்களை சாதகமாக பயன்படுத்தி ஆட்சியை கவிழ்த்திருப்பார் என்ற குரல் பரவலாக எழுந்தது.

ஆனால், அதிமுகவி உட்கட்சி பிரச்னையைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வர விரும்பவில்லை. மக்களின் பேராதரவுடன் ஆட்சியமைப்போம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறிவருகிறார்.

இதற்கிடையே, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கட்சிக்கு தலைமையேற்ற பிறகு நடந்த முதல் தேர்தலான ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் கூட வாங்காமல், திமுக வேட்பாளர் தோற்றது, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையேயும் தொண்டர்களிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஸ்டாலினின் தலைமைப் பண்பு மேல் சந்தேகக் குரல்கள் எழவும் இந்த தோல்வி வாய்ப்பாக அமைந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்த கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி, திமுகவிற்கு ஸ்டாலின் தலைமை வகிக்கும் வரை திமுக எந்த தேர்தலிலும் வெற்றி பெறாது என அதிரடியாக கருத்து தெரிவித்து பரபரப்பை கிளப்பினார். அழகிரியின் இந்த கருத்துக்கு பிறகு கட்சியின் சில மூத்த நிர்வாகிகள் கூட அழகிரியுடன் பேசிவருவதாக தகவல்கள் வெளியாகின.

இப்படியாக திமுகவிற்குள் ஏற்கனவே சலசலப்பு நிலவிவரும் நிலையில், அதை அதிகப்படுத்தும் வகையில், நெல்லையில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மு.க.அழகிரி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரின் புகைப்படங்களை போட்டு “தலைமை ஏற்று திமுகவை காப்பாற்று” என்ற வாசகங்களுடன் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர், திமுகவில் சலசலப்பை அதிகரித்துள்ளது.
இது முடிவல்ல. ஆரம்பம்தான். இதுபோன்ற போஸ்டர்கள் இனிமேல் நிறைய ஒட்டப்படும். அழகிரியை திமுகவிற்கு தலைமை தாங்க விடுக்கப்படும் அழைப்பு ஸ்டாலினின் தலைமைக்கு சவாலாகவே இருக்கும் என அழகிரியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
