Investigative Commission that gave time to Apollo

ஜெயலலிதா மரணம் குறித்த விவகாரத்தில் தங்களிடம் உள்ள சிகிச்சை ஆவணங்களை தாக்கல் செய்ய ஜனவரி 12 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி அப்போலோ மருத்துவமனைக்கு விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, லண்டன் டாக்டர், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள், அப்போலோ டாக்டர்கள் என சிகிச்சை அளித்தனர். 75 நாட்கள் சிகிச்சை பெற்று ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. 

இதையடுத்து ஜெ., மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன் அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி விசாரணை கமிஷன் விசாரணை செய்து வருகின்றது. 

இதில், சசி குடும்பத்தாரிடமும், ஜெ குடும்பத்தாரிடமும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஜெயலலிதாவுடன் நெருங்கி பழகியவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றார். 

அதன்படி ஒவ்வொருவரையாக சம்மன் அனுப்பி விசாரணை செய்து வருகின்றார். அந்த வகையில் ஜெயலலிதா மரணம் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அப்போலோ நிர்வாகத்திற்கு விசாரணை ஆணையம் உத்தரவிட்டது. 

ஆனால் ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு அப்போலோ தரப்பில் கோரப்பட்டது. 

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்த விவகாரத்தில் தங்களிடம் உள்ள சிகிச்சை ஆவணங்களை தாக்கல் செய்ய ஜனவரி 12 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி அப்போலோ மருத்துவமனைக்கு விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.