சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கின் விசாரணையை விரிவுபடுத்த வேண்டுமென ஹேம்நாத்தின்  தந்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகார் அளித்த பின்  செய்தியாளர்களிடம் பேசிய ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், சித்ராவின் தற்கொலை வழக்கை விரிவுபடுத்த வேண்டும். விசாரணை என்பது குறுகிய வட்டத்தில் நடைபெறுகிறது என்றார். 


மேலும் சித்ராவின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்து சித்ராவின் சினிமா நட்பு வட்டாரங்களையும், நெருங்கிய நண்பர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளதாக கூறினார். சித்ரா தற்கொலைக்கு முந்தைய நாள்வரை இருவீட்டாரும் மகிழ்ச்சியுடன் இருந்ததாகவும், திருமணத்திற்கான திருமண வரவேற்பு, திருமண மண்டபத்தை சித்ராவையே முன்னின்று இரு வீட்டாரும் பார்க்க சென்றதாக தெரிவித்தார். 

சித்ராவின் தற்கொலைக்கு குடும்ப அளவில் எந்த வித அழுத்தமும் இல்லை எனவும், நட்பு வட்டாரத்தில் விசாரணையை அதிகரிக்க வேண்டுமெனவும் புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளதாக கூறினார்.  தற்கொலைக்கு முந்தைய நாள் திருமண வரவேற்பிற்காக பார்க்கப்பட்ட மண்டபத்தை குடும்பத்துடன் பார்க்க சென்றபோது பதிவாகியிருந்த சிசிடிவி வீடியோவின்  புகைப்படங்களை  புகார் மனுவோடு ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.