சுகேஷ் சந்திரசேகருடன் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் வெளியானது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாக கூறி இவர் தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள் உள்ளன
.
அ.தி.மு.க. பிளவுபட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி.தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.
அவர் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் சென்னை, பெங்களூரு பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், ரூ.82.5 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன
.
இதற்கிடையே சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொழில் அதிபர்களை ஏமாற்றி ரூ.200 கோடி பணம் பறித்த புகாரில் கைதாகி ஜெயிலில் அடைப்பட்டு உள்ள சுகேஷ் சந்திரசேகருடன் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் வெளியானது. ஜாக்குலினுக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள பரிசு பொருட்களை சுகேஷ் சந்திரசேகர் வழங்கி இருப்பதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து ஜாக்குலினுக்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி விசாரித்தனர். 
ஜாக்குலினும் சுகேசும் காதலித்து வந்ததாகவும் கூறப்பட்டது. இதனை ஜாக்குலின் மறுத்தார். இந்த நிலையில் தற்போது சுகேசுடன் ஜாக்குலின் நெருக்கமாக இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பகிர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு ஜாக்குலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்த நாட்டு மக்கள் எனக்கு மரியாதையையும் அன்பையும் தந்துள்ளனர். இதில் ஊடகமும் அடங்கும். அவர்களிடம் இருந்து நிறைய கற்று இருக்கிறேன். இப்போது நான் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறேன். எனவே எனது தனிப்பட்ட புகைப்படங்களை வலைத்தளத்தில் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நீதி வெல்லும்‘‘ என்று கூறியுள்ளார்.
