தமிழகத்தில் 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கலாமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் வரை வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. புதிய வாக்காளர்களை சேர்த்தல், முகவரி மற்றும் பெயர் நீக்கம், திருத்தம், போன்ற பணிகளை செய்து ஜனவரி மாதம் 5ஆம் தேதி வாக்காளர்  பட்டியலை வெளியிடுவது வழக்கமாகும். 

அந்த வகையில் இப்போது வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகளில் சிறப்பு கவனம் செலுத்த அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். சட்டமன்றப் பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற இருப்பதையொட்டி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும், வாக்காளர் பட்டியலை தவறு இல்லாமல் தயாரிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வருகிற நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடவும் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து அதில் திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 

அதன் அடிப்படையில் தற்போது வாக்காளர் பட்டியல் பணிகள் நடைபெற துவங்கியுள்ளன, தற்போது தமிழகத்தில் 66 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. 1500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி என்ற அளவில் சில இடங்களில் வாக்குச்சாவடிகள் உள்ளன. ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடியை அமைக்கலாம், என்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது, இவ்வாறு உருவாக்கினால் 70,000 வாக்குச்சாவடிகள், தமிழகத்தில் அமைய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட 9 அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.