தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை கஜா புயல் சின்னா பின்னமாக்கி போட்டது. எதிர்பாராத புயலால் வாழ்வதாரத்தை இழந்த மக்கள் தங்கள் பகுதிக்கு நிவாரண உதவிகளை கொண்டு வர வலியுறுத்தி தற்போது வரை போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் எல்லாம் நடந்துவிடாது என்பதை எல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் மக்கள் இல்லை. காரணம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு அப்படி.

இதனால் அமைச்சர்கள், அதிகாரிகள் என மக்கள் யாரையும் பொருட்படுத்தவில்லை. தங்கள் பகுதிக்கு மின்சாரம் இல்லை, தங்கள் பகுதிக்கு தண்ணீர் இல்லை என்று சிறை பிடித்து வருகின்றனர். அமைச்சர் ஓ.எஸ் மணியன் பொதுமக்களிடம் இருந்து தப்பிக்க சுவர் ஏறிக் குறித்து ஓடிய சம்பவங்கள் எல்லாம் நாகையில் அரங்கேறின. இதனால் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் பாதிப்புகளை பார்வையிட செல்லாமல் தயங்கி இருந்தார்.

ஆனால் எதிர்கட்சிகளின் அழுத்தம் காரணமாக ஆகாய மார்க்கமாக புயல் பாதிப்புகளை பார்த்துவிட்டு திரும்பிவிடலாம் என்று கடந்த வாரம் திருச்சி சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சென்று புயல் பாதிப்புகளை பார்வையிட்டார். அதன் பிறகு திருவாரூர் புறப்பட்ட முதலமைச்சரின் ஹெலிகாப்டரால் தரையிறங்க முடியாத அளவிற்கு வானிலை மோசமாக இருந்தது. இதனால் பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார்.

அப்போதும் கூட சாலை மார்க்க பயணத்தை எடப்பாடி பழனிசாமி தவிர்க்க காரணம் பொதுமக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம், சிறை பிடிக்கப்படலாம் என்கிற கவலை தான். இந்த நிலையில் தற்போதும் கூட நாகை, திருவாரூர், பட்டுக்கோட்டை பகுதிகளில் நிலைமை சீராகவில்லை. மின் விநியோகம், தண்ணீர் பிரச்சனை தற்போதும் நீடிக்கிறது.

இதனால் திருச்சி வரை விமானத்தில் சென்று அங்கிருந்து நாகைக்கு சாலை மார்க்கமாக செல்வது அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது என்று எடப்பாடி பழனிசாமிக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக நாகையை அடைவதற்குள் நிச்சயம் பொதுமக்கள் எங்காவது சாலையை மறிப்பார்கள், மாற்றுப் பாதைக்கு கூட வழியில்லாத நிலை ஏற்படும் என்று எடப்பாடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்தே நேராக சென்னையில் இருந்து ரயில் மூலம் நாகை சென்றுவிடும் திட்டம் முன்வைக்கப்பட்டது. ரயில் மூலம் நாகை சென்றுவிட்டால் அங்கிருந்து அருகாமையில் உள்ள ஒரு சில இடங்களை பார்த்துவிட்டு சிட்டாக சென்னைக்கு பறந்து வந்துவிடலாம் என்பது தான் ரயில் பயணத்திற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.