துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சை சந்திக்க வந்த அதிமுக செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தியை வாசலோடு திருப்பி அனுப்பிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளராக இருந்தவர் புகழேந்தி. பெங்களூர் புகழேந்தி என்றால் ஓரளவிற்கு அப்போது அதிமுக நிர்வாகிகளுக்கு பரிட்சயம். ஆனால் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அதிமுக நிர்வாகிகள் அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறியவர் புகழேந்தி. ஜெயலலிதா சிறையில் இருந்த போது அங்கு அவருக்கான தேவைகளை பார்த்து பார்த்து செய்து கொடுத்தார் இவர். இதனால் சசிகலாவின் அன்பை பெற்றவருக்கு அப்போது முதல் ஏறுமுகம் தான். ஜெயலலிதா விடுதலையான பிறகு போயஸ் கார்டனுக்கு அழைத்து புகழேந்திக்கு தேவையானவற்றை செய்து கொடுத்ததாக கூறுவார்கள்.

இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு சசிகலா பெங்களூர் சிறைக்கு சென்ற பிறகும் அவருக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கும் பணியில் புகழேந்தி தீவிரம் காட்டினார். இந்த தருணத்தில் ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார். அந்த சமயத்தில் தினகரனுககு ஆதரவாகவும், சசிகலாவுக்கு சப்போர்ட்டாகவும் டிவிக்களில் பேச ஆரம்பித்தார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் புகழேந்தி பிரபலம் அடைந்தார். தொடர்ந்து தினகரன் ஓரம்கட்டப்பட்டு அதிமுகவை ஓபிஎஸ் – இபிஎஸ் கைப்பற்றிய பிறகும் கூட தினகரனுக்காக அவரது குரலாக ஒலித்து வந்தார் புகழேந்தி.

இதே போல் பெங்களூர் சிறையில் சசிகலாவை நினைத்த போதெல்லாம் சந்திக்கும் வாய்ப்பு புகழேந்திக்கு கிடைத்தது. இந்த நிலையில் தான் டிஜிபி ரூபா ரூபத்தில் சசிகலாவுக்கு சிறையில் சிக்கல் எழுந்தது. இந்த சிக்கல் பெரிதாக புகழேந்தி தான் காரணம் என்று தினகரன் கருதினார். ஆனால் தினகரன் தான் பிரச்சனைக்கு காரணம் என சசிகலாவிடம் புகழேந்தி போட்டுக் கொடுத்தார். இதனை தொடர்ந்து சசிகலாவை சந்திக்க புகழேந்திக்கு தடை போட்டார் தினகரன். இதனால் ஏற்பட்ட அதிருப்தியால் தினகரனிடம் இருந்து விலகினார் புகழேந்தி. பிறகு அதிமுகவில் மீண்டும் இணைய எடப்பாடி பழனிசாமியிடம் நேரம் கேட்டு பல மாதங்கள் காத்திருந்தார்.

பிறகு ஒரு நாள் நேரடியாக சேலம் சென்று எடப்பாடியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அவருக்கு செய்தி தொடர்பாளர் பதவியும் கொடுக்கப்பட்டது. அப்போது முதல் தினகரனுக்கு எதிராக அதிமுகவில் இருந்து பேசி வரும் நபராக புகழேந்தி உள்ளார். இந்த நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே மோதல் மூண்டுள்ளது. முதலமைச்சருடனான ஆலோசனையை புறக்கணித்துவிட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் அவரை காண அவரது வீட்டுக்கு வருகிறார்கள். அப்படி வருபவர்கள் முன்கூட்டியே அனுமதி பெற்று வருகிறார்கள். இதன் மூலம் ஓபிஎஸ் வீட்டு முன் இருக்கும் காவல் சாவடி மையத்தில் அங்கிருந்து கொடுக்கப்படும் வாகன எண்களுடன் வரும் கார்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று முன் தினம் புகழேந்தி ஓபிஎஸ்சை சந்திக்க அவரது வீட்டிற்கு வருகை தந்தார். ஆனால் அவர் அனுமதி எதுவும் பெறாமல் வந்ததால் அவரது காரை உள்ளே விட போலீசார் மறுத்தனர். பிறகு புகழேந்தி காரில் இருந்தபடியே ஓபிஎஸ் உதவியாளரை தொடர்பு கொண்டு பேசினார். அவர் அய்யாவிடம் கேட்டு சொல்வதாக கூற மூடப்பட்ட கேட்டிற்கு முன்னார் காரிலேயே சுமார் 10 நிமிடங்கள் வரை புகழேந்தியை காத்திருக்க வைத்தார். பிறகு ஒரு கட்டத்தில் காரை உள்ளே அனுமதிக்குமாறு ஓபிஎஸ் வீட்டில் இருந்து தகவல் வர, புகழேந்தி உள்ளே அனுமதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து ஓபிஎஸ் வீட்டுக்கு சென்ற புகழேந்தியை வாசலோடு மறித்துள்ளனர் காவலர்கள். அய்யா தூங்கிக் கொண்டிருக்கிறார், உங்களை பிறகு வருமாறு கூறியுள்ளனர் என்று காவலர்கள் கூற அதிர்ச்சியில் உறைந்துள்ளார். புகழேந்தி, சரி அப்படி என்றால் உள்ளே உள்ள நிர்வாகிகளையாவது சந்தித்துவிட்டு செல்கிறேன் என்று கூறி இல்லை வீட்டிற்குள் யாருக்கும் அனுமதி இல்லை என கூறி அவரை வாசலோடு திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் வீட்டு வாசல் வரை வந்த அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார். பதவிக்காக எடப்பாடி பழனிசாமியை காத்திருந்த சந்தித்த புகழேந்தி அதற்கு முன்னதாக ஓபிஎஸ்சை மிக கடுமையாக விமர்சித்தவர். அதனை மனதில் வைத்து தான் புகழேந்தியை அவமானப்படுத்தி அனுப்பியதாக சொல்கிறார்கள்.