இந்திய வீரர்கள் மீது சீனப் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். நம் வீரர்களின் பதிலடியில் 43 சீன ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல்லையில் அவ்வப்போது அத்துமீறி செயல்படுவது சீன ராணுவத்தின் வாடிக்கை. இதேபோல கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்தியாவின் லடாக் பகுதியில் உள்ள கல்வான் என்ற இடத்தில் சீனப் படைகள் முகாமிட்டன. இதனால், இந்திய படைகளும் அங்கே முகாமிட்டன. ஆயுதங்களும் அங்கே குவிக்கப்பட்டன. இந்தப் பதற்றத்தைக் குறைக்க இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், நேற்று முன்தினம் மாலையில் திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் அத்துமீறி நடத்திய  தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியானது. பின்னர் இரவில் நம் தரப்பில் 20 பேர் வீர மரணத்தை தழுவியுள்ளனர் என்ற செய்தி வெளியானது. இதை இந்திய ராணுவமும் உறுதி செய்தது.


இந்தத் தாக்குதல் மற்றும் உயிரிழப்புகளால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு  துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் அவசர ஆலோசனை நடத்தினர். பின்னர் பிரதமர் மோடியைச் சந்தித்து விளக்கமளித்தனர். இந்நிலையில் சீன தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீன ராணுவம் அத்துமீறி அட்டூழியத்தில் ஈடுபட்டபோது, நம் வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்தப் பதிலடி தாக்குதலில் 43 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அந்நாட்டு பத்திரிகைகளும் செய்தியாக வெளியிட்டுள்ளன.
இந்திய - சீன எல்லைப் பகுதிக்கு விரைவாக செல்லும் வகையில் இந்திய அரசு, சாலை உள்பட கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டுவருகிறது. அதில் ஒரு பகுதியாக லடாக்கின் பாங்கோக் த்சோ நதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பாலம் உட்பட பல்வேறு கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த சீனா, லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்து அட்டூழியம் செய்துவருகிறது.