இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021-2022 நிதியாண்டில் 11 சதவீதமாக இருக்கும்.. பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்.
குறிப்பாக ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அதிகமாக சேமித்தனர், செலவீனங்கள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது என பொருளாதார ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை வலியுறுத்தி, தனியார் துறையின் கைகளில் கட்டுப்பாட்டை கொடுத்து அரசாங்கம் பொருளாதாரத்தை முன்னோக்கி தள்ளியுள்ளது.
2021 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளது என்றும், ஆனால் அது 2022 நிதியாண்டில் 11 சதவீதமாக உயர வாய்ப்பிருக்கிறது எனவும் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் என பரபரப்பான சூழலுக்கு மத்தியில் 2021-22 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் 2020- 2021 நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி எந்த அளவிற்கு இருக்கும் என கணித்து ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கான அறிக்கையை பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கடந்த நிதியாண்டில் நாடு முழுவதும் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி மற்றும் பின்னடைவு, நாட்டின் உட்கட்டமைப்பு, விவசாயம், தொழில்துறை உற்பத்தி, வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு, ஏற்றுமதி, இறக்குமதி பணப்புழக்கம், அந்நிய செலாவணி, வர்த்தகம் போன்றவைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அந்த ஆய்வறிக்கை முன்வைக்கப்பட்டது. தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இந்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் வலுவான ஏற்றம் பெறும் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.
மேலும், 2021 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதமாக இருக்கக்கூடும் என்றும், ஆனால் அது 2022 நிதி ஆண்டில் 11 சதவீதமாக இருக்கலாம் என்றும், இந்தியாவின் நாமினல் ஜிடிபி வளர்ச்சி 15.4 சதவீதமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மிகப்பெரிய வளர்ச்சி விகிதமாக அது இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. வரி வருவாய் அதிகரிக்கும் என்ற அடிப்படையில் இந்த வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 2022 முதல் 2029 வரை இந்தியா இந்த உண்மையான வளர்ச்சி விகிதத்தை எட்டினால்,மற்ற நாடுகளுடன் போட்டிபோட்டு வேகமாக முன்னேறும், கடந்தாண்டுகளில் அரசாங்கம் அடிப்படை துறைகளுக்கு அதிக செலவு செய்துள்ளது. வளர்ச்சி விகிதம் 2004 முதல் 2009 வரை சுமார் 8 சதவீதமாக இருந்தது, ஆனால் அரசாங்க செலவினங்கள் மேலும் அதிகரித்தது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அதிகமாக சேமித்தனர், செலவீனங்கள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது என பொருளாதார ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை வலியுறுத்தி, தனியார் துறையின் கைகளில் கட்டுப்பாட்டை கொடுத்து அரசாங்கம் பொருளாதாரத்தை முன்னோக்கி தள்ளியுள்ளது. தேவைகள் அடிப்படையிலான பல சீர்திருத்தங்களை இந்தியா முன்வைத்துள்ளது.
கொரோனா மருந்து பயன்பாட்டுக்கு வந்ததால் இந்திய பொருளாதாரம் V வடிவத்தில் மேல்நோக்கி செல்லும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் முன்கள பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் அதன் முகப்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை டிஜிட்டல் புத்தகமாக வழங்கப்பட்டுள்ளது. இதுவரை கோவிட்-19 ஐ முறியடிப்பதில் உத்திரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.