சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக மாமல்லபுரம் கடற்பரப்பில் நேற்று முதல் இந்திய  கப்பற் படையின் போர்க்கப்பல் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அயல் நாட்டுத் தலைவருக்கு வழங்கப்பட்ட உச்சகட்ட பாதுகாப்பாக இது கருதப்படுகிறது.

இந்திய பிரதமரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் நேற்று சந்தித்துக் கொண்டனர்.  முன்னதாக சீனாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக ஏற்பாடு செய்திருந்த தமிழர்களின் பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், போன்ற கலைக்குழுவினர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க தயாராக காத்திருந்தனர் அவர் வந்தபோது உற்சாகமாக பாரம்பரிய நடனத்துடன் அவரை வரவேற்றனர். அதில் அதிபர் ஜி ஜின்பிங் மெய்சிலிர்த்து தமிழர்களின் பாரம்பரிய நடனங்களை ரசித்தார். தன்னை வரவேற்ற நடன கலைஞர்களுக்கு நன்றியை தெரிவிக்கும் வகையில்  அவர்களுக்கு கையசைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்நிலையில் அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பிறகு அவர் அங்கிருந்து காரில் ஏறி கிண்டி ஐடிசி ஓட்டலுக்கு சென்றார். இந்நிலையில் சென்னை, மற்றும் மாமல்லபுரத்தில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சீன அதிபரின் வருகையையொட்டி சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் பாதைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  ஜி ஜின்பிங்கிற்கு உச்சக்கட்ட பாதுகாப்பை வழங்கும் வகையில்,  மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமருக்கு  கடலோர அச்சுறுத்தலில் இருந்துபாதுகாப்பு  வழங்கும் விதமாக இந்திய இந்திய கடலோர காவற்படையின்  போர்க்கப்பல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை மாமல்லபுரம் கடற்பரப்பில் கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மற்றும் ஹெலிகாப்டர் மூலமாகவும் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பும் மேற்கொண்டனர். இறுதி நாளான இன்று இருநாட்டு அதிகாரிகளுடனான பேச்சுவார்தைக்கு பின்னர் ஜி ஜிங்பிங் சீனா திரும்ப உள்ளார்.