Asianet News TamilAsianet News Tamil

இது கபட நாடகம்.. உண்மையைப் போல் காட்சியளிக்கும் பொய்தான்.. உலக நாடுகளுக்கு அலார்ட் கொடுக்கும் ராமதாஸ்.!

இலங்கைப் போர் முடிவடைந்து 12 ஆண்டுகள் ஆகியும் அங்கு மனித உரிமை மீறல் தொடருவதாகவும், போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

Indian government must stand by to punish war criminals... ramadoss
Author
Tamil Nadu, First Published Sep 24, 2021, 3:49 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் கபட நாடகத்தை ஈழத் தமிழர்கள் நம்பவில்லை. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நம்பி ஏமாந்துவிடக் கூடாது என ராமதாஸ் கூறியுள்ளார். 

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இலங்கை இனச் சிக்கல் குறித்து வெளிநாடு வாழ் தமிழர் அமைப்புகளுடன் பேச்சு நடத்துவதற்கும், விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவும் தயாராக இருப்பதாக, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கூறியுள்ளார். இது ஈழத் தமிழர்களையும், உலக நாடுகளையும் ஏமாற்றுவதற்கான சதி என்பதைத் தவிர வேறில்லை.

Indian government must stand by to punish war criminals... ramadoss

ஐ.நா. சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, நியூயார்க்கில் ஐ.நா. தலைமைச் செயலாளர் அண்டோனியா குத்தேரஸை சந்தித்துப் பேசிய பின்னர், இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார். கோத்தபயவின் இந்த அறிவிப்பை மேலோட்டமாகப் பார்க்கும்போது கோத்தபய திருந்திவிட்டதாகவும், ஈழத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டிருப்பது போன்றும் நினைக்கத் தோன்றும். ஆனால், இது உண்மையைப் போல் காட்சியளிக்கும் பொய்தான்.

2009-ம் ஆண்டு இலங்கை போர் முடிவடைந்தவுடன், ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என்று அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்தார். அதன் பின்னர், அவர் அதிபராக இருந்த 6 ஆண்டுகளில் ஈழத் தமிழர்களுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. மாறாக, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றி காலனிமயமாக்கும் பணிகள்தான் நடைபெற்றன. அப்போது, பாதுகாப்புத்துறைச் செயலாளராக இருந்த கோத்தபய 2019-ம் ஆண்டில் இலங்கை அதிபராகப் பதவியேற்ற பிறகும்கூட தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டணி தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில், அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவுடன் கடந்த ஜூன் மாதம் பேச்சு நடத்துவதாக கோத்தபய அறிவித்திருந்தார்.

Indian government must stand by to punish war criminals... ramadoss

ஆனால், கடைசி நேரத்தில் வேறு தேதி கூட அறிவிக்கப்படாமல் அப்பேச்சுகள் ரத்து செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி, வெளிநாடு வாழ் தமிழர்கள் அமைப்புகள் பலவற்றையும் பயங்கரவாத அமைப்புகள் என்று அறிவித்து கோத்தபய ராஜபக்ச தடை செய்தார். அடுத்த ஆறு மாதங்களில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பேச்சு நடத்தப்போவதாக கோத்தபய அறிவித்தால் அதை எவரும் நம்ப மாட்டார்கள். ஈழத் தமிழர் அமைப்புகளுடன் பேசப்போவதாகவும், சிறையில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்கப் போவதாகவும் கோத்தபய அறிவித்ததற்குக் காரணம் இருக்கிறது. கோத்தபய, அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட சிங்களப் பேரினவாத சக்திகள் மீதான போர்க் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைத் திரட்டுவதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தீவிரம் காட்டத் தொடங்கியிருப்பதுதான் அந்தக் காரணமாகும்.

ஈழத் தமிழர் இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்குடன், ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46-வது கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இங்கிலாந்து, ஹாலந்து, கொரியா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆதரித்ததன் பயனாக இலங்கைப் போர்க் குற்றங்கள் குறித்து விசாரித்து ஆவணப்படுத்துவதற்காக பன்னாட்டுப் பொறிமுறை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பொறிமுறை மூலம் திரட்டப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிசெல் பாச்லெட் கடந்த 13-ம் தேதி ஐ.நா. மனித உரிமை பேரவையின் 48-வது கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கைப் போரில் நிகழ்த்தப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் குறித்து 1.20 லட்சத்துக்கும் கூடுதலான ஆதாரங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் திரட்டியிருக்கிறது; கூடுதல் ஆதாரங்களைத் திரட்டும் பணிகளை இந்த ஆண்டில் தொடங்கிவிடுவோம் என்று அந்த அறிக்கையில் பாச்லெட் கூறியுள்ளார். இலங்கைப் போர் முடிவடைந்து 12 ஆண்டுகள் ஆகியும் அங்கு மனித உரிமை மீறல் தொடருவதாகவும், போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். இத்தகைய சூழலில் போர்க்குற்ற விசாரணை தீவிரமடைவதைத் தடுப்பதற்காகவும், உலக நாடுகளில் கண்டனத்திற்கு ஆளாவதிலிருந்து தப்புவதற்காகவும் தான் கோத்தபய சமாதானத் தூதர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

Indian government must stand by to punish war criminals... ramadoss

ஐ.நா. மனித உரிமை ஆணையம் அமைத்துள்ள பன்னாட்டுப் பொறிமுறை ஒன்றரை ஆண்டுகளில், போர்க் குற்றங்கள் குறித்த அனைத்து ஆதாரங்களையும் திரட்டி ஆவணப்படுத்தும். அவ்வாறு ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாக வைத்து மனித உரிமைகளில் அக்கறையுள்ள எந்த நாடும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் வழக்குத் தொடர்ந்து ராஜபக்ச குடும்பத்தினர் உள்ளிட்ட அனைத்துப் போர்க் குற்றவாளிகளுக்கும் தண்டனை பெற்றுத்தர முடியும். இதுகுறித்த அச்சம்தான் கோத்தபயவை இப்படியெல்லாம் பேச வைக்கிறது. அவரது இந்த கபட நாடகத்தை ஈழத் தமிழர்கள் நம்பவில்லை. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நம்பி ஏமாந்துவிடக் கூடாது.

Indian government must stand by to punish war criminals... ramadoss

மாறாக, இலங்கை போர்க் குற்றங்கள் குறித்த ஆதாரங்களைத் திரட்டும் முயற்சிக்கு உலக நாடுகள் அனைத்தும் துணை நிற்க வேண்டும். ஆதாரங்கள் திரட்டப்பட்டவுடன் ராஜபக்ச சகோதரர்கள் உள்ளிட்ட போர்க் குற்றவாளிகளைப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி தண்டிக்கவும், அதன் மூலம் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தரவும் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றின் நிறைவாக ஐ.நா. மூலம் உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி தனித் தமிழீழம் அமைக்கவும் இந்தியா வகைசெய்ய வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios