அரசியல் களத்தில் தீவிரமாக இயங்கி வரும் கமல் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டிருப்பது அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள் மட்டுமல்லாமல் தொண்டர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் பிக் பாஸ் மூலம் நடிகர் கமல் பட்டி தொட்டி எங்கும் மீண்டும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து அரசியல் கருத்துக்களை ட்வீட் செய்து ஒரு கட்டத்தில் மக்கள் நீதி மையம் எனும் அரசியல் கட்சியைத் துவங்கினார். அரசியல் கட்சியை துவங்கிய பிறகு படங்களில் நடிக்கப்போவதில்லை என்று கமல் கூறி வந்தார். 

ஆனால் அதற்கு மாறாக பிக் பாஸ் 2 சீசன் தொகுத்து வழங்க கமல் ஒப்புக்கொண்டார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியும் வெற்றி பெற்ற நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் கமல் தீவிரம் காட்டினார். இடையே இந்த இரண்டு திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய கமல் தேர்தல் பிரச்சாரத்தை காரணம் காட்டி படப்பிடிப்புகளுக்கு டிமிக்கி கொடுத்து வந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இயக்குனர் சங்கர் ஒரு கட்டத்தில் இந்தியன் 2 படத்தை ஒதுக்கி வைத்துவிட்டு வேறு படத்தை துவங்கும் முடிவுக்கு வந்து விட்டதாக கூறுகிறார்கள். 

ஆனால் இந்தியன் டு திரைப்படம் நிச்சயம் வெளியாகும் என்றும் தேர்தல் முடிந்த பிறகு கமல் படப்பிடிப்புகளுக்கு செல்வார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கும் கமல் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முந்தைய இரண்டு சீசன் களையும் விட மிக அதிக தொகை கமலுக்கு கொடுக்கப்பட உள்ளது.

இந்தியன் 2 திரைப்படத்தை ஓரங்கட்டி வைத்துவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் ஒப்புக்கொண்டதால் பின்னணியில் மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத்தலைவராக இருக்கும் மகேந்திரன் இருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். மகேந்திரன் விஜய் டிவியில் பணியாற்றிவிட்டு கமல் கட்சியில் சேர்ந்தவர். தற்போதைக்கு கமல் கட்சியின் முக்கிய நிர்வாகியாக மட்டுமல்லாமல் அதற்கான செலவுகளையும் கவனித்துக் கொள்பவர்கள் மகேந்திரன் முக்கியமானவர். இவர் மூலமாகத்தான் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனை தொகுத்து வழங்க விஜய் டிவி உடன் ஒப்பந்தமானார்.

 

இந்த நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு வேறு தொகுப்பாளர்களை தேடிக் கொண்டிருந்த நிலையில் அதனை எல்லாம் முறியடித்து மீண்டும் கமலை அந்த சூழலில் சிக்கவைத்தது மகேந்திரன் தான் என்கிறார்கள். இந்தியன் டு திரைப்படத்தோடு திரையுலகில் இருந்து ஒதுங்கிக் கொள்ள கமல் முடிவெடுத்திருந்தார். ஆனால் அதனையும் நடக்கவிடாமல் அரசியலிலும் கமலை தீவிரம் காட்ட விடாமல் மீண்டும் பிக் பாஸ் எனும் சமூக சமுதாயத்தை சீரழிக்கும் நிகழ்ச்சி என்று குற்றம்சாட்டப்படும் ஒரு நிகழ்ச்சியில் சிக்க வைத்திருப்பது மகேந்திரனுக்கு அழகா என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளே முணுமுணுக்கிறார்கள்.