கொரோனா தொற்று பரவத் தொடங்கி 5 மாதங்களுக்கு மேலாகியும் இன்றும் குறையத் தொடங்காத ஒரே நாடு இந்தியா தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். 

கொரோனா வைரஸ் 2000க்கும் மேற்பட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில், குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே மிக அதிக அளவில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்துள்ளனர். கடந்த சில நாட்களாக இந்தியாவில் தினசரி பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டி வருகிறது. ஆனால், அமெரிக்கா மற்றும் பிரேசிலில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் உலக அளவில் கொரோனா தொற்று குறையாத ஒரே நாடு இந்தியா தான் என்று பாமக நிறுவனர் டாகடர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கொரோனா தினசரி பாதிப்புகள் அமெரிக்காவில்  28,561 ஆகவும், பிரேசிலில் 17,330 ஆகவும் குறைந்து விட்டது. ஆனால், இந்தியாவில் 89,852 ஆக அதிகரித்து விட்டது. உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட 2.47 லட்சம் தொற்றுகளில்  மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் ஏற்பட்டவை!

கொரோனா தொற்று பரவத் தொடங்கி 5 மாதங்களுக்கு மேலாகியும் இன்றும் குறையத் தொடங்காத ஒரே நாடு இந்தியா தான். எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மக்கள் இதை கருத்தில் கொண்டு  மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்  என்று குறிப்பிட்டுள்ளார்.