மந்தநிலையில் நாட்டின் பொருளாதாரம்: 2018-ம் ஆண்டில் பாஜகவின் வருமானம் ரூ.2,410 கோடியாக அதிகரிப்பு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துவி்ட்டதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் கூறிவரும் நிலையில் பாஜகவின் 2018-19-ம் ஆண்டு வருமானம் ரூ.2,410 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்த வருமானம் 2017-18-ம் ஆண்டைக்காட்டிலும் 135 சதவீதம் அதிகமாகும் என்று தேர்தல் ஆணையத்தில் தெரிவித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் தெரிவித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதுபடி, “ பாஜவுக்கு கடந்த 2018-19-ம் ஆண்டில் மொத்த வருமானம் ரூ.2,410 கோடியாகும். இதற்கு முந்தைய நிதியாண்டில் பாஜகவின் வருமானம் சுமார் ரூ.1,027 கோடியாக இருந்தது. இந்நிலையில் இது 134 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாயிலாக ரூ.1,450 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் ரூ.1005 கோடியை செலவு செய்ததாக பாஜக கணக்கில் தெரிவித்துள்ளது. தேர்தல் செலவுக்கும், பிரச்சாரச் செலவுக்கும் ரூ.792.4 கோடி செலவு செய்ததாகத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த 2018-19-ம் ஆண்டில் அந்த கட்சிக்கு ரூ.918 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த 2017-18-ம் ஆண்டைக் காட்டிலும்  361 சதவீதம் அதிகமாகும். கடந்த 18 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வருமானத்தில் இதுதான் அதி்கமாகும்.

காங்கிரஸ் கட்சிக்கு மொத்த வருமானத்தில் இக்கட்சி ரூ.383 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது. முந்தைய நிதியாண்டில் தேர்தல் பத்திரம் மூலம் ரூ.5 கோடி மட்டுமே பெற்றிருந்த நிலையில் திடீரென உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் காங்கிரஸ் ரூ.470 கோடி செலவிட்டுள்ளதாக கூறியுள்ளது