income tax raid old currency change by sasikala family

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது சசிகலா குடும்பத்தினரால் ரூ.280 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சசிகலா, திவாகரன், டிடிவி தினகரன், விவேக், கிருஷ்ணபிரியா உட்பட அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரது வீடுகளில் கடந்த 9-ம் தேதி முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் மொத்தம் 187 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 3 நாளில் 167 இடங்களில் சோதனை நடத்தி முடிக்கப்பட்டது. 4-வது நாளான நேற்று 20 இடங்களில் சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டது. சென்னையில் ஜெயா டிவி அலுவலகம், விவேக்கின் கோடம்பாக்கம் வீடு, ஜாஸ் சினிமாஸ் நிர்வாக அலுவலகம், இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவின் தி.நகர் வீடு, படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை ஆகிய இடங்களில் இன்று 5-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 4 நாட்களாக நடந்த சோதனையில், ஆயிரக்கணக்கான சொத்து ஆவணங்கள், போலி நிறுவனங்கள் நடத்தியதற்கான ஆவணங்கள், முறைகேடான பணப்பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்கள், பென்டிரைவ், ஹார்டிஸ்க், வங்கி ஆவணங்கள் உட்பட பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக 50 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த 50 நாட்கள் இடைவெளியில் சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மட்டும், மொத்தம் 280 கோடி ரூபாய்க்கு புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. அதற்கான சில ஆவணங்களையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதில், குறிப்பாக புதுச்சேரியில் உள்ள நகைக்கடை மூலம் மட்டுமே 168 கோடி ரூபாய்க்கு புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றியுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையிலான சோதனையில் கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி முழுமையாக முடியவில்லை. அந்தப் பணி முடிந்த பின்னரே மொத்த விவரமும் அதிகாரிகளுக்கே தெரியவரும். திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோர் தொடர்புடைய இடங்களில் இருந்துதான் அதிகமான ஆவணங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவேதான் அவர்களின் வீடுகளில் தொடர்ந்து தீவிரமான சோதனை நடத்தப்பட்டு வருகிறது.