புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதாரணமாக சிறிய மருத்துவமனை நடத்தி வந்த அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர் இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதி.

2001- 2006 ஜெயலலிதா ஆட்சியின்போது சட்டப் பேரவையில் கருணாநிதியையும் அவரது குடும்பத்தினரையும் சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த ஜெயலலிதா அடுத்த நாளே அவருக்கு சுகாதாரத் துறை அமைச்சர் பதவியைக் கொடுத்து அழகு பார்த்தார். அன்று முதல் அவருக்கு ஏறுமுகம்தான்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் கல்வி நிறுவனங்கள், கல்குவாரிகள், தொழிற்சாலைகள் என அவரது சொத்துக்கள் மளமளவென குவியத் தொடங்கியது.

அது மட்டுமல்லாமல் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு இவர் மூலம்தான் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. இதை நீண்ட நாட்களாக கண்காணித்து வந்த வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சென்னை, மதுரை,புதுக்கோட்டை, விராலிமலை என அனைத்து இடங்களில் அதிரடியாக நுழைந்தனர்.

சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள அமைச்சரது வீட்டில் 30 வருமான வரித்துறை அதிகாரிகள், துணை ராணுவ படை வீரர்களுடன் நுழைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போன்று திருச்சி, புதக்கோட்டை, விராலிமலையில் உள்ள என்ஜினியரிங் கல்லூரி, கலைக்கல்லூரி, கல்குவாரிகள். எழுப்பூரில் உள்ள அமைச்சரின் சகோதரி வீடு, அவரது நண்பர்கள் வீடுகள என 30 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

மத்திய துணை பாதுகாப்புப் படையினரின் துணையுடன் இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது.
சென்னையில் நடைபெற்று வரும் இந்த ரெய்டை படம் பிடிக்க முயன்ற பத்திரிக்கையாளர்களை போலிசார் விரட்டி அடித்தனர், இதனால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.