கடந்த 1981-ம் ஆண்டில் உ.பி.யில் முதல்வராக இருந்த வி.பி.சிங் கொண்டு வந்த சட்டத்தைப் பயன்படுத்தி இன்னும் அமைச்சர்களும், முதல்வர்களும் வருமான வரி செலுத்துவதில்லை. 

அதாவது 1980களில் உ.பி. மாநிலத்தில் அரசியலுக்கு வந்த அரசியல் வாதிகள் ஏழ்மை நிலையில் இருந்ததாலும், ஊதியம் குறைவாக இருந்ததாலும் வருமான வரி செலுத்த இயலாமல் இருந்தனர். 

இதனால், இவர்களுக்கான வருமானவரியை அரசே செலுத்த கடந்த 1981-ம் ஆண்டு உ.பி. அமைச்சர்கள் ஊதியம், படிகள், சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படிதான் இன்னும் அமைச்சர்கள், முதல்வர்கள் வருமானவரி செலுத்தாமல் தப்பித்து வருகிறார்கள்.

1981-ம் ஆண்டுக்குப்பின் உ.பியில் இதுவரை 19 முதல்வர்கள் வந்துள்ளனர். தற்போது முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத், முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், மாயாவதி, கல்யாண் சிங், ராம் பிரகாஷ் குப்தா, ராஜ்நாத் சிங், ஸ்ரீபதி மிஸ்ரா, வீர் பகதூர் சிங், நரேன் தத் திவாரி ஆகியோர் இந்தச் சட்டத்தால் பலன் அடைந்து வருமான வரி செலுத்தவில்லை, இவர்களின் அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களும் வருமான வரி செலுத்தாமல் மக்கள் பணத்தில் இருந்துதான் வருமான வரி செலுத்தப்படுகிறது

இந்த சட்டம் கொண்டுவந்தபின் பலன் அடைந்த முதல்வர்கள், அமைச்சர்கள் பலரும் காங்கிரஸ் அல்லாத கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். தற்போதுள்ள முதல்வர் ஆதித்யநாத் அரசில் இருக்கும் அமைச்சர்கள், முதல்வருக்கும் சேர்த்து இதுவரை மாநில அரசு சார்பில் ரூ.86 லட்சம் வருமானவரி அரசு கரூவூலத்தில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது