முதலமைச்சர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருப்பது அனைவரும் அறிந்ததே.

இதையடுத்து தமிழகத்தில் அடுத்தடுத்து உச்சகட்ட பரபரப்பு தெறிக்கிறது.

இதனிடையே முதலமைச்சர் பன்னீர்செல்வமும் சசிகலாவும் தனித்தனியே ஆளுனரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

இந்நிலையில் சசிகலா தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் தங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம் என ஒருவரையொருவர் போட்டி போட்டுகொண்டு களத்தில் குதித்துள்ளனர்.

சசிகலாவிடம் இருந்த எம்.எல்.ஏக்களை அடுத்து எம்.பி.க்களும் மக்கள் விருப்பத்திற்கு மதிப்பளித்து பன்னீருக்கு அதரவு தெரிவிப்பதாக அணி மாறி வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை வெளியே விடாமல் சிறைபிடித்து காத்து வருகிறார்.

சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து நான்காவது நாளாக கூவத்தூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நானே நேரில் வருகிறேன் என எம்.எல்.ஏக்களை சந்திக்க சசிகலா கூவத்தூரில் உள்ள ரிசார்டிற்கு கிளம்பியுள்ளார்.

இதனிடையே பகீர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. சசிகலாவை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் நடவடிக்கைகளை கடந்த சில தினங்களாகவே வருமான வரித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் எந்த நேரத்திலும் வருமான வரி சோதனை நடக்ககூடும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

முன்னதாக அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் நட்சத்திர விடுதியில் காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர் ஆய்வு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.