தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் (28-12-2020) அன்று தென் கடலோர மாவட்டங்களில், இடியுடன் கூடிய லேசான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என எச்சரித்துள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ்வரை இருக்கும் என கூறியுள்ளது.  

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லார் (கோவை) 4 சென்டி மீட்டர் மழையும், வால்பாறை (கோவை) 3 சென்டி மீட்டர் மழையும், சின்கோனா (கோவை) 2 சென்டி மீட்டர் மழையும், சோலையார் (கோவை) சித்தார், கன்னியாகுமரி தலா 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. டிசம்பர் 24,25 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும், வங்கக் கடல் பகுதிகளில் மீனவர்களுக்கு இதுபோன்ற எந்த அச்சுறுத்தலும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.