நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா...! விதியை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றிய இபிஎஸ் அணி
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்கிறவிதி ரத்து செய்யப்பட்டு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவை 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தொடங்கினார். அவரது மறைவிற்கு பிறகு அதிமுக ஜெயலலிதா கைக்கு சென்றது. இதனையடுத்து 1988 ஆம் ஆண்டு முதல் அதிமுக என்ற பேரியக்கத்தை மிகப்பெரிய இயக்கமாக வளர்த்து வந்தார் ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்தில் யாரும் இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெறாத நிலையில் ஜெயலலிதா இரண்டு முறை தொடர்ச்சியாக அதிமகவை ஆட்சியில் அமர வைத்தார். இதனையடுத்து 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் திடீர் மறைவு அதிமுவிற்குள் மிகப்பெரிய போர்களத்தை உருவாக்கியுள்ளது. அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக பல வகையில் பிளவுப்பட்டுள்ளது. சசிகலா, டிடிவி.தினகரன், ஓபிஎஸ் என அடுத்தடுத்து ஏற்பட்ட பிளவால் அதிமுக வின் நிலை கேள்வி குறியாகியுள்ளதாக அரசியில் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு, 4 மாத காலத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக சட்டவிதிகளில் மாற்றங்களும் கொண்டு வரப்பட்டது. 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்க்கு பிறகு சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் சிறைக்கு சென்ற பிறகு மீண்டும் ஓபிஎஸ்-இபிஎஸ் அணி இணைந்தது. அப்போது அதிமுகவில் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே எனக்கூறி அதிமுக சட்ட விதிகளில் மாற்றம் கொண்டுரவப்பட்டது.இதனையடுத்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. தற்போது ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் அணி பிரிந்த நிலையில் தொடங்கிய பொதுக்குழு கூட்டத்தில் பல சட்ட விதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதில் விதி எண் 20ல் பொதுச்செயலாளர் என்ற தலைப்பில் கழக உறுப்பினர்களும்,நிர்வாகிகளும், ஏகமனதாக ஏற்றுக்கொண்டபடி புரட்சிதலைவி அம்மா டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் கழகத்தின் நிரந்தரப்பொதுச்செயலாளரகப் போற்றப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் விகித்த பொறுப்பிற்கு இனி யாரும் தேர்ந்தெடுக்கவோ அல்லது நியமிக்கப்படவோ மாட்டார்கள் என கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில் அந்த விதியை தற்போது அதிமுக பொதுக்குழு ரத்து செய்துள்ளது. அந்த விதி ரத்து செய்து தற்போது அந்த இடத்திற்கு எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.