மகாராஷ்டிரா மாநில அரசை கண்டித்து கர்நாடக மாநில எல்லையில் கன்னட அமைப்பினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்தில் உள்ள ஓசூர் மற்றும் ஊட்டி பகுதிகளை கர்நாடகாவோடு இணைக்க வேண்டும் என வாட்டாள் நாகராஜ் பேசியுள்ளார். 

கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகிய இரு மாநில எல்லையில் அமைந்துள்ளது பெல்காம் மாவட்டம். இங்கு பெல்காம், நிப்பானி, ஹெல்லூர், கானாப்புரா உள்ளிட்ட பல பகுதிகளில் மராட்டியர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் இருந்து, பெல்காம் யாருக்கு சொந்தம் என்பதில் இரு மாநிலங்களுக்கு இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. மராட்டியர்கள் அதிகமாக வாழும் பெல்காம் மாவட்டத்தை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று அங்குள்ள மராட்டிய அமைப்புகளும் மஹாராஷ்டிராவில் உள்ள சிவசேனா அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. 

இதற்கு ஆதரவு தெரிவித்து அவ்வப்போது போராட்டங்களும் வெடித்துள்ளன. இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள் பெல்காம் பகுதியை மகாராஷ்டிராவுக்கு விட்டுத்தர மாட்டோம் எனவும் பெல்காம் பகுதியை அபகரிக்க நினைக்கும் மகாராஷ்டிரா அரசையும், சிவசேனா உள்ளிட்ட அமைப்புகளை  கண்டித்தும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் உத்தவ் தாக்கரேவை கண்டித்தும், கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் ஊர்வலமாக வந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னட சலுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கன்னட ரக்ஷன வேதிகே, கன்னட சாக்ருதி வேதிகே உள்ளிட்ட கன்னட கூட்டமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

மாநில எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து மகாராஷ்டிராவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்களால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கர்நாடக மாநில போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அப்போது பேசிய வாட்டாள் நாகராஜ் பெல்காம் பகுதியானது தங்களுக்கு சொந்தமானது அதை விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும், தமிழகத்தில் உள்ள ஓசூர்  மற்றும் ஊட்டி ஆகிய இடங்களை கர்நாடக மாநிலத்தோடு இணைக்க வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே தமிழக எல்லைப் பகுதிக்குள் நுழைந்து தமிழ் எழுத்துக்களை கன்னட சலூவாளி அமைப்பினர் அழித்துள்ள நிலையில், இப்போது வாட்டாள் தமிழக பகுதிகளை கர்நாடகத்துடன் இணைக்க வேண்டும் என்று பேசியிருப்பது தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.