காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது சிறுவன் ஒருவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான்.  அவனைப் பார்த்த காமராஜர் அவனை ஏன் ஸ்கூலுக்கு போகவில்லை ?  என கேட்டுள்ளார். அவரை யார் என தெரியாத அந்த சிறுவன், ஸ்கூல்ல கஞ்சி ஊத்துவாங்களா ? என பதில் கேள்வி கேட்விட்டு தன்னுடைய வேலையைப் பார்க்கத் தொடர்ந்திருக்கிறான்.

இந்த பதிலால் மிரண்டு போன காமராஜரின் மனதில் உதித்தது தான் மதிய உணவுத் திட்டம். நாளடைவில் மதிய உணவுத் திட்டம் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில்  சத்துணவுத் திட்டமாகவும், கருநிதி ஆட்சிக் காலத்தில் முட்டையுடன் கூடிய உணவாகவும், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வாழைப்பழம், வெரைட்டி ரைஸ் என பரிணாம வளர்ச்சி கண்டது.

இந்நிலையில் கடந்த 2019 பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் முயற்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இத்திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.

மாநகராட்சிப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் திட்டப்படி காலை உணவாக இட்லி, பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டு வந்தன. இத்திட்டம் விரைவில் தமிழக அரசுப் பள்ளிகள் முழுதும் செயல்படுத்தப்பட இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில்  மாணவ மாணவியருக்கு சத்துள்ள சிற்றுண்டி வழங்கும் 'காலை உணவு திட்டத்தை' தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு விரிவுப்படுத்த தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளியிடுவார் என்றும் இத்திட்டத்தை பிரதமர் தொடங்கி வைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு கிராமப் பகுதிகளில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்கிறார்கள்